பெற்றோரின் அலட்சியம் இறப்பர் பட்டி கழுத்தில் இறுகி 9 வயது சிறுவன் பலி!..

கலவான, பொத்துபிட்டி, பனாபொல பிரதேசத்தில் ஒன்பது வயது சிறுவன் ஒருவன் இறப்பர் பட்டியொன்று கழுத்தில் இறுகியதில் உயிரிழந்துள்ளதாக பொத்துபிட்டி  பொலிஸார் தெரிவித்தனர்.

‘கன்கானம்லாகே ககன’ என்ற  சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ள நிலையில்,  அவர் குடும்பத்தில் ஒரே பிள்ளை என தெரிவிக்கப்படுகிறது.

இச்சிறுவன் சிறுவயது முதலே  சுத்தியல், இரும்பு கம்பிகளில் இறப்பர் பட்டிகளை கட்டி சுழற்றுவதை பொழுது போக்காக கொண்டிருந்துள்ளார்.  இந்நிலையில் நேற்று முன்தினம்  (13) வீட்டில் இருந்த கல் உடைப்பதற்கு பயன்படுத்தப்படும் இரும்பு கம்பியொன்றில் இறப்பர் பட்டியை கட்டி சுழற்றியுள்ளார்.

இதன்போது, பெற்றோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், ​​வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் கழுத்தை இறப்பர் பட்டி சுற்றி இரும்பு கம்பி தலையில் பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சுமார் அரை மணித்தியாலத்துக்கும் மேலாக முற்றத்தில் சிறுவன் சுயநினைவின்றி கிடந்ததை மற்றுமொரு சிறுவன் கண்டு அவரது பெற்றோருக்கு அறிவித்துள்ளான்.

ஆபத்தான நிலையில் பொத்துபிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவன்,  மேலதிக சிகிச்சைக்காக கலவான வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

பெற்றோரின் அலட்சியமே இந்த உயிரிழப்புக்கு காரணம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here