
IPL கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி, சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நான்காவது தடவையாக சாம்பியனானது.
IPL கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபாயில் நேற்றிரவு நடைபெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி இருபது ஓவர்கள் முடிவில் 192 ஓட்டங்களை அதிரடியாகக் குவித்தது.
ருதுராஜ் கய்க்வாட் 32 ஓட்டங்களையும் ரொபின் உத்தப்பா 31 ஓட்டங்களையும் பெற்று வலுவான ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுத்தனர்.
மொயின் அலி 37 ஓட்டங்களைப் பெற்றார்.
Faf du Plessis மூன்று சிக்ஸர்கள் 7 பௌண்டரிகள் அடங்கலாக 59 பந்துகளில் 86 ஓட்டங்களைப் பெற்றார்.
சுனில் நரைன் இரண்டு விக்கெட்களையும், ஷிவம் மாவி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 165 ஓட்டங்களையே பெற முடிந்தது.
வெங்கடேஷ் ஐயர் 50 ஓட்டங்களையும் ஷூப்மன் கில் 51 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றனர்.
நித்திஷ் ரானா ஓட்டமின்றி ஆட்டமிழக்க, அனுபவம் மிக்க வீரர்களான நரைன், மோர்கன், தினேஷ் கார்த்திக், ஷகிப் அல் ஹசன் ஆகியோராலும் பிரகாசிக்க முடியவில்லை.
சென்னை சுப்பர் கிங்ஸ் அணி IPL தொடரில் நான்காவது தடவையாகவும் சாம்பியனானது.
2010, 2011 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் இதற்கு முன்னர் சென்னை அணி சாம்பியனாகியுள்ளது.