உரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் விவசாய சமூகத்தின் பொருளாதாரத்தை 100 வீதம் அதிகரிப்பதை உறுதியளிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் சல்காடு விளையாட்டரங்கில் இன்று (09) பிற்பகல் இடம்பெற்ற பொதுஜன பெரமுன கூட்டத் தொடரின் முதலாவது கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த பேரணியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி..
“எனது முதல் தேர்தல் பேரணியில் உரத்தை இலவசமாக வழங்குவோம் என்றும் நெல்லுக்கு உத்தரவாத விலையை உயர்த்துவோம் என்றும் வாக்குறுதி அளித்தேன். அதுதான் என் முதல் கடமை. உரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் விவசாய சமூகத்தின் வருமானம் நூறு சதவீதம் அதிகரிக்கும் என்று இன்று சொல்கிறேன். விவசாய சமூகத்தின் நலனுக்காக எதையும் செய்ய நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என்பதை இந்தத் தருணத்தில் உறுதியளிக்கிறேன். ஐந்தாண்டு காலம் நாட்டை ஆட்சி செய்து விவசாயத்திற்கு எதுவும் செய்யாதவர்கள் தற்போது ஜனாதிபதி கனவு கண்டு விவசாயியை ஏமாற்றி இந்த நாட்டை அதல பாதாளத்திற்கு கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர். இந்த நாட்டில் நாம் ஏற்படுத்திய பாதுகாப்பை ஐந்து வருடங்கள் நாட்டை ஆண்டவர்கள் மீறினார்கள்.
என்னுடன் இணைந்திடுங்கள். என்மீது நம்பிக்கை வையுங்கள். உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சக்திகள் அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிக்கின்றன. நாங்கள் கொவிட் சவாலை எதிர்கொண்டோம். தடுப்பூசி கொண்டு வந்து செலுத்தினோம். தற்போது மூன்றாவது தடுப்பூசியும் ஏற்றப்படுகிறது. இந்த மூன்றாவது தடுப்பூசியை எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் நாட்டை மூடுவதற்க்கு அனுமதிக்காதீர்கள். ”