திறமைகளை மேம்படுத்திக்கொண்டு, தொழில் வாழ்க்கையில் முன்னேறிச் செல்வதே இளம் அதிகாரிகளின் கடமையாகக் காணப்படுகிறது என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
கட்டுநாயக்கவில் அமைந்துள்ள இலங்கை விமானப்படை முகாமில் இன்று (29) முற்பகல் இடம்பெற்ற விமானப் படை அதிகாரிகளின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சுமார் 70 வருடங்களுக்கும் மேலாக விமானப் படையினரால் தாய் நாட்டுக்காகச் செய்யப்பட்ட சேவைகள் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புதல், தேசிய பாதுகாப்பை மேம்படுத்தல் நடவடிக்கைகளுக்கு வழங்கிய பங்களிப்புகளுக்கு, ஜனாதிபதி பாராட்டுகளைத் தெரிவித்தார்.
அதிகாரிகளின் நேர்மை மற்றும் ஒழுக்கத்தின் மதிப்பு தொடர்பில் எடுத்துக்காட்டிய ஜனாதிபதி, அதுவே உரிய அதிகாரிகளின் தலைமைத்துவத்தின் கீழ் உள்ள மற்ற அணிகளின் உண்மையான அக்கறையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.
நல்வாழ்வு மற்றும் வெற்றிக்காக, உண்மையான அர்ப்பணிப்புகளுடன், முடிந்த அனைத்தையும் அதிகாரிகளுக்காக முன்னெடுப்பதாகவும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.
அனைத்துப் பயிற்சிகளின் போதும் விசேட திறமை காட்டிய கெடெட் அதிகாரிகள் 14 பேருக்கு, ஜனாதிபதியினால் விருதுகள் வழங்கப்பட்டன.
பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரண, விமானப்படை பணிப்பாளர் சபையின் உறுப்பினர்கள், அதிகாரிகள், புதிய அதிகாரிகளின் உறவினர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.