நெல்சன் மண்டேலாவின் சிறை சாவியின் ஏலம் ரத்து

நிறவெறிக்கு எதிராக போராடிய தலைவர் நெல்சன் மண்டேலா அடைக்கப்பட்டிருந்த சிறை சாவியின் ஏலம் ரத்துசெய்யப்பட்டுள்ளது

தென் ஆப்பிரிக்காவில் நிலவிய நிறவெறிக்கு எதிராக போராடி 27 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் நெல்சன் மண்டேலா. இந்த 27 ஆண்டுகளில் 18 ஆண்டுகள் ரோபன் தீவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சில தினங்கள் முன் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் செயல்பட்டு வரும் Guernsey’s என்கிற ஏல நிறுவனம், வரும் 28ஆம் திகதி  மண்டேலா தங்கியிருந்த சிறை அறையின் சாவி ஏலம்  விடப்படும் என்று அறிவித்தது.

இதன்மூலம் கிடைக்கும் வருமானம் மண்டேலாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள அவரது சொந்த கிராமத்தில் நினைவுத் தோட்டம் அமைக்க பயன்படுத்தப்படும் என்று நிறுவனம் அறிவித்தது.

இந்த ஏலத்துக்கு தென் ஆப்பிரிக்கா கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்ததோடு, “சிறைச் சாவி தென்னாப்பிரிக்க மக்களுக்குச் சொந்தமானது என்றும்  அந்தச் சாவி தென் ஆப்பிரிக்காவின் வலி நிறைந்த வரலாற்றை வெளிப்படுத்தும் அடையாளம்  என்றும்  தென் ஆப்பிரிக்க கலாசார அமைச்சர் தன் நாடு சார்பில் விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.

இந்நிலையில்  நீண்ட சர்ச்சைகளுக்குப் பிறகு இந்த ஏலம் நிறுத்தப்பட்டுள்ளது. ‘சிறைச்சாலை சாவி அரசின் அனுமதி இல்லாமல் வெளியே கொண்டுச் செல்லப்பட்டுள்ளது’ எனத் தென் ஆப்பிரிக்க அரசு, அமெரிக்க நிறுவனத்திடம் தெரிவித்ததை அடுத்து, ஏலத்தை நிறுத்திவைக்க அந்நிறுவனம் சம்மதித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here