ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கட்சி அரசியல் கட்சியாக,அரசியலிலும் தேச சேவையிலும் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாட்டை அழித்த இந்த அரசாங்கம் உடனடியாக தோற்கடிக்கப்பட வேண்டும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சிகள் என்று கூறி மக்களுக்கு ஆற்ற வேண்டிய சேவையை புறக்கணிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
நொடிக்கு நொடி நாளுக்கு நாள் இந்த அரசாங்கம் நாட்டை அழித்து வருவதாகவும், இந்நிலையிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்பும் ஆற்றல் ஐக்கிய மக்கள் சக்தியிடமே உள்ளது எனவும், அதிகாரம் இல்லாவிட்டாலும் கூட ஐக்கிய மக்கள் சக்தி நாட்டுக்கு குறிப்பிட்ட விதத்தில் பெறுமதி சேர்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
“ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து மூச்சு”திட்டத்திற்கு இணைவாக ஆரோக்கியமான நாட்டை உருவாக்கும் நோக்கில் ‘ஜன சுவய’ திட்டத்தின் கீழ் “சத்காரய” திட்டத்தின் 36 ஆவது கட்டமாக, இருபத்து நான்கு இலட்சத்து ஐம்பத்து ஏழு ஆயிரம் ரூபா (ரூ.2,457,000) பெறுமதியான அத்தியாவசிய வைத்தியசாலை உபகரணங்கள் நேற்று (08) மன்னார்,செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலைக்கு அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.