டெல்ஹி அருண் ஜெய்ட்லி விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (20) இரவு நடைபெற்ற 18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தின் இந்த வெற்றியுடன் ராஜஸ்தான் றோயல்ஸ் 18ஆவது ஐபிஎல் அத்தியாத்தை நிறைவு செய்து விடைபெற்றது.
அதேவேளை ஐந்து தடவைகள் சம்பியனான சென்னை சுப்பர் கிங்ஸ் இந்த வருட ஐபிஎல் போட்டிகளில் தனது 10ஆவது தோல்வியைத் தழுவி அணிகள் நிலையில் கடைசி இடத்திலிருந்து அசைய முடியாமல் இருக்கிறது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது. சென்னை சுப்பர் கிங்ஸின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.
முதல் இரண்டு விக்கெட்கள் ஒரே மொத்த எண்ணிக்கையான 12 ஓட்டங்களுக்கு வீழ்ந்தன.
அயுஷ் மஹாத்ரே, ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 56 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு நம்பிக்கையைக் கொடுக்க முயற்சித்தனர்.
ஆனால், அயுஷ் மஹாத்ரே (43), ரவிச்சந்திரன் அஷ்வின் (13) ஆகிய இருவரும் 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் களம் விட்டகன்றனர்.
அவர்களைத் தொடர்ந்து ரவிந்த்ர ஜடேஜா (1) களம் புகுந்த சொற்ப நேரத்தில் வந்த வழியே சென்றார். (78 – 5 விக்.)
எனினும் டிவோல்ட் ப்ரவிஸ், ஷிவம் டுபே ஆகிய இருவரும் வேகமாகத் துடுப்பெடுத்தாடி 6ஆவது விக்கெட்டில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர்.
டிவோல்ட் ப்ரவிஸ் 25 பந்துகளில் 42 ஓட்டங்களையும் ஷிவம் டுபே 39 ஓட்டங்களையும் பெற்றனர்.
அணித் தலைவர் எம்.எஸ். தோனி 16 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் ஆகாஷ் மத்வால் 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் யுத்விர் சிங் 47 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க 27 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் 17.1 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 188 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
யஷஸ்வி ஜய்ஸ்வால், வைபவ் சூரியவன்ஷி ஆகிய இருவரும் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி 37 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். இதில் 36 ஓட்டங்களை யஷஸ்வி ஜய்ஸ்வால் பெற்றார்.
அதன் பின்னர் வைபவ் சூரியவன்ஷி, அணித் தலைவர் சஞ்சு செம்சன் அகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 98 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 135 ஓட்டங்களாக உயர்த்தினர்.
எனினும் இருவரும் ஒரே ஓவரில் ரவிச்சந்திரன் அஷ்வினின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தனர்.
சஞ்சு செம்சன் 41 ஓட்டங்களையும் வைபவ் சூரியவன்ஷி 33 பந்துகளில் 4 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 53 ஓட்டங்களையும் பெற்றனர்.
சற்று நேரத்தில் ரியான் பரக் 3 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
எனினும், த்ருவ் ஜுரெல் 12 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 31 ஓட்டங்களையும் ஷிம்ரன் ஹெட்மயர் 5 பந்துகளில் ஆட்டம் இழக்கமால் 12 ஓட்டங்களையும் பெற்று ராஜஸ்தான் றோயல்ஸின் வெற்றியை உறுதி செய்தனர்.
பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஷ்வின் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
ஆட்டநாயகன்: ஆகாஷ் மத்வால்.