மஹிந்த மற்றும் ரணில் ஆகியோரை பார்த்த கோணத்தில் எங்களை பார்க்காதீர்கள் – பிமல் ரத்நாயக்க

தமிழ் மக்களின் காணிகளில் பிறிதொரு தரப்பினரை குடியேற்ற வேண்டிய தேவை எமக்கு கிடையாது. மஹிந்த மற்றும் ரணில் ஆகியோரை பார்த்த கோணத்தில் எங்களை பார்க்காதீர்கள், தேசிய நல்லிணக்கத்தை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம். காணி அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சும் கூட்டாக சமர்ப்பிக்கும்  அமைச்சரவை பத்திரம் ஊடாக விசேட குழு ஒன்று நியமிக்கப்படும்.அதனூடாக காணி பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் (20) நடைபெற்ற அமர்வின் போது  வடக்கு மாகாணத்தில் உள்ள காணிகள் தொடர்பில்  அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானியை  மீளப்பெறல் தொடர்பான பிரேரணையை பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்வைத்தார்.இந்த பிரேரணை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

மக்களின் காணிகளை  சுவீகரிக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. வடக்கு மாகாணத்தில் தேசிய மக்கள் சக்தி  அமோக வெற்றிப் பெற்றுள்ளது.   வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி  மூன்று உறுப்பினர்கள் எம்முடன் இருக்கிறார்கள். இவ்வாறான நிலையில் நாங்கள் ஏன்  வடக்கு மக்களுக்கு அநீதி இழைக்கும் வகையில் செயற்பட வேண்டும் ,?

இந்த வர்த்தமானி தொடர்பில் தமிழ் பிரதிநிதிகள் பல விடயங்களை முன்வைத்துள்ளார்கள்.  தமிழ் மக்களின் காணிகளில் பிறிதொரு தரப்பினரை குடியேற்ற வேண்டிய தேவை எமக்கு கிடையாது.  மஹிந்த மற்றும் ரணில் ஆகியோரை பார்த்த கோணத்தில் எங்களை பார்க்காதீர்கள் , தேசிய நல்லிணக்கத்தை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம்.

காணி பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு 09 மாகாணங்களையும் வரையறுத்து இந்த வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்துக்கு மாத்திரம் பிரத்தியேகமாக   பிரசுரிக்கப்படவில்லை.  காணி பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு காணி  அமைச்சு மற்றும்  சுற்றாடல் துறை அமைச்சு ஒன்றிணைந்து கூட்டு பத்திரத்தை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளது.

இந்த கூட்டு பத்திரம் ஊடாக  விசேட குழு ஒன்று நியமிக்கப்படும்.அதனுடாக தீர்வு காணப்படும். ஆகவே தமிழ் மக்களின் காணிகளை கையகப்படுத்தும் நோக்கம் அரசாங்கத்துக்கு சிறிதளவேனும் கிடையாது.அவ்வாறு செயற்பட வேண்டிய அவசியமும் இல்லை என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here