அதிகார மோகமுடையவர்கள் வடக்கிலும், தெற்கிலும் மீண்டும் இனவாதத்தை தூண்ட ஆரம்பித்துள்ளனர். இனவாதம் தலைதூக்குவதற்கு இனி ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது. காலத்துக்கு காலம் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவும், அதனைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும், தாம் செய்த குற்றங்களை மறைப்பதற்காகவும் யுத்தம் பயன்படுத்தப்பட்டுள்ளது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
திங்கட்கிழமை (19) கோட்டை – ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் போர் வீரர் நினைவு தூபி அமைந்துள்ள மைதானத்தில் 16ஆவது தேசிய போர் வீரர் நினைவு நாள் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
யுத்தத்தை நிறைவு செய்வதற்காக படை வீரர்கள் பலர் தமது உயிரைத் தியாகம் செய்துள்ளனர். இந்த தூபி முழுவதும் நிரம்புமளவுக்கு அவர்களது பெயர்கள் பொதிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று பெருமளவானோர் வாழ்நாள் முழுவதும் அங்கவீனமுற்றவர்களாகியுள்ளனர். இந்த நாடு எந்நாளும் அவர்களுக்கு கடன்பட்டுள்ளது.
இந்த தூபியில் தனது மகனின் பெயர் உள்ளதா, தனது கனவனின் பெயர் உள்ளதா, தனது தந்தையின் பெயர் உள்ளதா என உறவுகள் தேடித்தேடித் துயருவதைப் பார்த்திருக்கின்றோம். இது மாத்திரமா? வடக்கிலும் இதே நிலைமைதான். அங்குள்ளவர்கள் தமது பிள்ளைகளையும், கனவர்மாரையும், பெற்றோரையும் இழந்தவர்கள் அவர்களது புகைப்படங்களை வைத்து கண்ணீருடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
அனைத்து பெற்றோருக்கும் தமது பிள்ளைகள் பிள்ளைகள் தான். ஆனால் இவர்களது தமது பிள்ளைகள் மாணிக்கங்களாவர். 1980களிலிருந்து படுகையிலேயே தமது காலத்தைக் கழிக்கும் முன்னாள் படை வீரர்கள் இன்றும் இருக்கின்றனர். எதிர்கால சந்ததியினருக்கு அவ்வாறான சமூகத்தை நாம் வழங்கி விடக் கூடாது. இவ்வனைத்து அழிவுகளும் தானாகத் தோன்றியவை அல்ல.
காலத்துக்கு காலம் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவும், அதிகாரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும், அதிகாரத்தைப் பயன்படுத்தி செய்த குற்றங்களை மறைப்பதற்காகவும் யுத்தத்தைப் பயன்படுத்தியிருக்கின்றனர். பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்க இதனை அடிப்படையாகக் கொண்ட பின்னணியிலேயே இரண்டரை ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டார்.
அவர் என்ன தவறு செய்தார்? அதிகாரத்தினாலேயே அவர் சிறையிலடைக்கப்பட்டார். மாறாக அங்கு சட்டமோ நீதியோ காணப்படவில்லை. இவ்வாறு தான் வரலாற்றில் மோதல்களும், யுத்தங்களும் அதிகாரத்தை பாதுகாத்து உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும், அதனை பலப்படுத்திக் கொள்வதற்காகவும் பயன்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது. வடக்கிலும், தெற்கிலும் உள்ள எமது பிள்ளைகள் அவற்றுக்கான சாட்சிகளாகவுள்ளனர்.
இவ்வாறான பேரழிவை ஏற்படுத்தி யுத்தம் ஏற்படுவதற்கு எவ்வித பங்களிப்பும் செய்திராத, அதனுடன் எந்த தொடர்பும் இல்லாத இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவோ, அதனை தக்க வைத்துக் கொள்வதற்காகவே இனவாதம், அடிப்படைவாதத்தை பரப்பாத அதற்காக பாடுபடாத கிராமங்களிலுள்ள பெற்றோரின் பிள்ளைகள் உயிரிழந்துள்ளனர்.
அதிகாரத்துக்காக அன்றும் அவ்வாறு தான். இன்றும் அவ்வாறு தான். அதிகார மோகத்தால் உருவாக்கப்படும் யுத்தம் என்பது பேரழிவாகும். எவ்வாறிருப்பினும் மக்களால் நிராகரிக்கப்பட்ட தோல்வியடைந்த சில குழுவினர் யுத்தம் என்பது ஆசீர்வாதம் என நினைக்கின்றனர். அது அவர்களுக்கு தான். ஆனால் எமக்கு அவ்வாறல்ல. இந்த குரல்களுக்கு நாம் இனியும் அஞ்ச வேண்டுமா?
அமைதியையும், நல்லிணக்கத்தையும் காட்டிக் கொடுப்புக்களாக திரிபுபடுத்தியிருக்கின்றனர். தற்போதுள்ள படை வீரர்கள் இப்போது எம் கைகளிலுள்ள துப்பாக்கிகள் எந்த சந்தர்ப்பத்திலும் இயக்கப்படக் கூடாது என்றே எண்ணுகின்றனர். ஆனால் மிகச்சிறிய குழுவொன்று அவற்றை ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் பயன்படுத்தச் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றனர்.
அவ்வாறான சந்தர்ப்பத்தை ஏற்படுத்த இடமளிக்கப் போவதில்லை என்பதை நாம் அச்சமின்றி கூற வேண்டும். அமைதியை நிலைநாட்டுவதற்கான எந்தவொரு தீர்மானத்தையும் எடுப்பதற்கு நாம் தயார். எவ்வாறிருப்பினும் இனவாதம் மீண்டும் வெளிவர ஆரம்பித்துள்ளது. அதிகார மோகமுடையவர்கள் வடக்கிலும், தெற்கிலும் மீண்டும் இனவாதத்தை தூண்ட ஆரம்பித்துள்ளனர். எனினும் அது தலைதூக்குவதற்கு இனி ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என்றார்.