உள்ளூராட்சி மன்றங்களைக் கைப்பற்றும் புதிய எதிர்க்கட்சி கூட்டணி ஜனநாயக விரோதமானது – சம்பிக்க ரணவக்க

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்கு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து புதிதாக ஸ்தாபிக்கப்படும் புதிய அரசியல் கூட்டணி முற்றிலும் தவறானது. ஜனநாயகத்துக்கு முரணானது. இந்த செயற்பாட்டில் நாங்கள் பங்காளியாக போவதில்லை. தேசிய மக்கள் சக்தி வெற்றிப் பெற்றப்பெற்ற அதிகார சபைகளில் அவர்கள் ஆட்சியமைக்க இடமளிக்க வேண்டும் என்று  ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள ஐக்கிய குடியரசு முன்னணியின் காரியாலயத்தில்  திங்கட்கிழமை (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கப் பெற்றுள்ளது. மக்களாணைக்கு அமைய அந்த கட்சி உள்ளுராட்சிமன்ற அதிகாரசபைகளில் ஆட்சியமைக்க இடமளிக்க வேண்டும். அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்குவதாக குறிப்பிட்டுக் கொண்டு தேசிய மக்கள் சக்தியை நெருக்கடிக்குள்ளாக்கும் செயற்பாடுகளுக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்க போவதில்லை.

பாராளுமன்றத்தின் அதிகாரத்தை மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வழங்கியுள்ளார்கள். அதுபோலவே தேசிய மக்கள் சக்தி வெற்றிப்பெற்றுள்ள 265 உள்ளுராட்சிமன்றங்களில் ஆட்சியமைக்க இடமளிக்க வேண்டும்.

எதிர்க்கட்சிகளின் புதிய அரசியல் கூட்டணியில் நாங்கள் பங்காளியாக போவதில்லை ஏனெனில் அது தவறு ஜனநாயக கோட்பாடுகளுக்கு முரணானது.

ஜனநாயக ரீதியில் மக்கள் ஆணை வழங்கியுள்ள தரப்பினர் ஆட்சியமைக்க இடமளிக்க வேண்டும்.பலவந்தமான முறையில் மாற்று கருத்துகளுக்கான கிடைத்த வாக்குகளை ஒன்றிணைத்து எதிர்க்கட்சி கூட்டணியமைப்பது சாத்தியமற்றது. தொடர்ச்சியாக எதிர்க்கொள்ளும் பின்னடைவை மீளாய்வு செய்ய வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here