எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் செல்வந்தம் தொடர்பான வரி ஒன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒவ்வொரு நபர்களினதும் சொத்துக்களை மதிப்பீடு செய்து, அதற்கமைய வரி அறவிடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பணம், வங்கி கணக்கு, நிலையான வைப்புக்கள், நிலையான சொத்துக்கள், காப்புறுதி, ஓய்வூதியம், வியாபார நடவடிக்கைகள் உள்ளிட்ட தனிப்பட்ட சொத்துக்களை மதிப்பீடு செய்து வரி அறவிடுவது குறித்து ஆராயப்பட்டு வருகின்றது.
கலந்துரையாடல் மட்டத்தில் காணப்படுகின்ற இந்த யோசனை, சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைக்கு அமைய 2025ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும், அரச வருமானத்தில் காணப்படுகின்ற பற்றாக்குறை காரணமாக, சர்வதேச நாணய நிதியத்தின் இந்த பரிந்துரையை 2024ம் ஆண்டு முதல் அமுல்படுத்த அரசாங்கம் கலந்துரையாடல்களை நடாத்தி வருவதாக அறிய முடிகின்றது.
எனினும், நபரொருவருக்கு அடிப்படை உரிமையாக சொந்தமாகும் வீடொன்று, வாகனமொன்று மற்றும் காணி ஒன்றுக்கு மேலதிகமாக, குறித்த நபருக்கு சொந்தமாகும் ஏனைய சொத்துக்களின் மீது இந்த வரியை அறவிடுமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த வரியை அளவிடுவது தொடர்பான இறுதி தீர்மானம் இதுவரை எட்டப்படவில்லை என அறிய முடிகின்றது.
WEALTH TEX என அழைக்கப்படும் இந்த வரி, முன்னாள் நிதி அமைச்சர் N.M.பெரேரா காலத்தில் அமுல்படுத்தப்பட்டதுடன், அந்த வரி நடைமுறை முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ ஆட்சிக்கு வரும் காலம் வரை அமுல்படுத்தப்பட்டிருந்தது.
ரணசிங்க பிரேமதாஸவின் ஆட்சி காலத்தில் ரத்து செய்யப்பட்ட இந்த வரி, அதற்கு பின்னர் ஆட்சிக்கு வந்த எந்தவொரு ஆட்சியாளர்களினாலும் அமுலுக்கு கொண்டு வரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
