“24 மணி நேரத்தில் வெளியேறு” இஸ்ரேலின் அறிவிப்புக்கு ஐ.நா போர்க்கொடி

காசா நகரை விட்டு பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்ற தனது அறிவிப்பை இஸ்ரேல் திரும்பப் பெற வேண்டும் என்று ஐ.நா வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் கட்டுரை எழுதியுள்ள ஐநா பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டரஸ்,

“காசா நகரில் வசிக்கும் பொதுமக்கள் 24 மணி நேரத்துக்குள் அங்கிருந்து வெளியேறி தெற்கு நோக்கி இடம் பெயர வேண்டும்; அவர்களின் பாதுகாப்பு கருதி இதனை தெரிவிக்கிறோம்; மறு அறிவிப்பு வந்த பிறகே அவர்கள் மீண்டும் தங்கள் வாழ்விடத்துக்கு திரும்ப வேண்டும்; அவர்கள் இஸ்ரேல் எல்லைப் பகுதியை நோக்கி வரக்கூடாது என்று இஸ்ரேலிய பாதுகாப்புப் படை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு அபாயகரமானது; மிக ஆழமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.

கடந்த ஒரு வாரமாக இஸ்ரேல் நடத்திய தாக்குதல் காரணமாக காசா நகரின் பல சாலைகள் சேதமடைந்துள்ளன. உடனடியாக வெளியேறுவது அவர்களுக்கு சாத்தியம் இல்லாதது. காசா நகரில் இருந்து சுமார் 11 லட்சம் பேர் வெளியேறுவதாக இருந்தால், ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படும்.

ஏனெனில், ஏராளமான மக்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறா்கள். பலருக்கு உயிர் காக்கும் கருவிகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே, காசா நகரில் இருந்து அனைத்து பொதுமக்களும் வெளியேறுவது சாத்தியமில்லாதது.

அதோடு, காசாவில் ஐ.நா பணியாளர்களும் உள்ளனர், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் ஐ.நா ஏற்படுத்தி இருக்கும் முகாம்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்கி இருக்கிறார்கள். இஸ்ரேலின் இந்த எச்சரிக்கை அவர்களுக்கும் பொருந்தக்கூடியதாக உள்ளது.

காசாவில் வசிக்கும் பொதுக்களில் ஏறக்குறைய பாதிபேர் 18 வயதுக்கும் குறைவானவர்கள். அவர்களில் ஆயிரக்கணக்கான குழந்தைகளும் உள்ளார்கள். ஏற்கனவே, உணவு, குடிநீர், மின்சாரம் இன்றி காசா மக்கள் தவித்து வருகிறார்கள்.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டிய தேவை ஐநாவுக்கும் அதன் பங்குதாரர்களுக்கும் இருக்கிறது. உணவு, குடிநீர், எரிபொருள் ஆகியவற்றை மனிதாபிமான அடிப்படையில் காசா மக்களுக்கு விநியோகிப்பது அனுமதிக்கப்பட வேண்டும்.

காசாவில் உள்ள தலைவர்களை நாங்கள் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகிறோம். எனவே, காசா நகர மக்களுக்கான தனது எச்சரிக்கையை இஸ்ரேல் திரும்பப் பெற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here