யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட எட்டு வயது சிறுமி ஒருவருக்கு ஊசி மருந்து ஏற்றியதில் ஏற்பட்ட தவறு காரணமாக சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் துண்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், காய்ச்சல் காரணமாக குறித்த சிறுமி அனுமதிக்கப்பட்ட நிலையில் நோய் எதிர்ப்புக்காக ஊசி மூலம் மருந்து ஏற்றப்பட்டது.
ஊசி ஏற்றப்பட்ட மறுநாள் இரவு சிறுமி வலியினால் அவதிப்பட்ட நிலையில் குறித்த விடுதியில் கடமையில் இருந்த தாதியர்களிடம் சிறுமியின் நோய்நிலை தொடர்பில் தாயார் கூறிய போது ஊசி ஏற்றப்பட்டால் வலி இருக்கும் என விடுதியின் தாதியர்கள் பொறுப்பற்ற விதத்தில் பதில் அளித்ததாக பெற்றோர் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சிறுமியின் கை நரம்பு பாதிக்கப்பட்டமை உணர்ந்த வைத்தியர்கள் அதனை அகற்ற வேண்டும் எனத் தெரிவித்த நிலையில் சனிக்கிழமை (02) காலை சத்திர சிகிச்சை மூலம் குறித்த சிறுமியின் மணிக்கட்டுக்குட்பட்ட பகுதி அகற்றப்பட்டது.
சிறுமி அனுமதிக்கப்பட்ட விடுதியின் பொறுப்பு வைத்தியர் குறித்த தினத்தில் கடமையில் இருந்தாரா என்பது தொடர்பில் சந்தேகங்கள் எழும் நிலையில் விடுதியில் இருந்த தாதியர்களின் அலட்சியப் போக்கும் சிறுமியின் கை அகற்றப்படுவதற்கு காரணமாக இருந்துள்ளது என்ற குற்றச்சாட்டு வலுவாக முன்வைக்கப்படுகிறது.
குறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதன வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவிக்கையில்,
இந்த சம்பவம் மனவேதனையை உண்டு பண்ணும் ஒரு சம்பவமாக பார்க்கிறேன். குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய மூவர் அடங்கிய விசாரணை குழுவை நியமித்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சுக்கும் குறித்த விடயம் தொடர்பாக அறிவித்துள்ளேன்.
விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை பாரபட்சமின்றி எடுப்பேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பில் குறித்த சிறுமியின் தாத்தா சுப்பையா கனக நாயகம் கருத்து தெரிவிக்கையில்,
எனது பேத்தியின் இந்த நிலைக்கு விடுதியில் இருந்த தாதியரின் அசண்டையீனமே காரணம் என கண்ணீர் மல்க தெரிவித்தர்.
கடந்த மாதம் 22 ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டிருந்தது. பிரபல வைத்தியர் மூலம் மருந்துகளை பெற்றுக் கொண்டோம். மருந்துகளை எடுத்தும் தொடர்ந்தும் காய்ச்சல் இருந்ததால் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் விடுதியில் வைத்திருந்தோம். அங்கு இருக்கின்ற தாதியர்கள் எனது பேத்திக்கு கையில் ஊசி மருந்து செலுத்துவதற்கான ஊசியை ஏற்றி இருந்த போது எந்த தப்பும் நடந்ததாக அப்போது எங்களுக்கு தெரியவில்லை,
பின்னர் மருந்துகளை ஏற்றுக் கொண்ட போது கை வீங்கி இருந்தது. இது தொடர்பில் அங்கிருந்த தாதிக்கு தெரியப்படுத்திய போதும் அவர் அதனை கண்டு கொள்ளவில்லை, தொடர்ந்து இரவு 11 மணி அளவில் மருந்து ஏற்றும் போது மருந்து மற்றும் ரத்தம் வெளியில் வருகிறது என்று சொன்ன போதும், அவர்கள் கவனம் செலுத்தவில்லை, அதற்கு அடுத்த நாள் வைத்தியரிடம் சொல்லிய போது தான் வைத்தியர் பார்வையிட்ட போது கை முழுமையாக செயலிழந்து விட்டதாகவும், அதற்குரிய மருந்துகளை செய்து அந்த கையை பழைய படி கொண்டு வருவோம் என்று சொல்லிய போதும் கடந்த இரண்டு நாளைக்கு முதல் கை கழட்டப்பட்டு அதற்குரிய மருந்துகள் செய்யப்பட்டு கொண்டிருக்கிறது.
தற்போதும் அவசர சிகிச்சை பிரிவிலேயே எனது பேத்தி உள்ளார். இதுவரை எதுவும் அறிவிக்கவில்லை,
இதற்கு முழுமையான காரணம் அந்த விடுதியில் இருந்த தாதியரின் அசண்டையீனமே என தெரிவித்துள்ளார்.