ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயாராகி வருகின்றார்.
இந்த நிலையில், ஜனாதிபதி ரணிவிக்ரமசிங்கவின் இந்திய விஜயம் குறித்து இந்திய ஊடகங்கள் இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளன….
“பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த இலங்கை தற்போது மெல்ல இயல்பு நிலையை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கும் நிலையில், இரண்டு நாள் பயணமாக ரணில் விக்ரமசிங்க இந்தியா வருகை தருகிறார்.
அவர் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இந்தியாவுக்கு வருவது இதுதான் முதல் முறையாகும். உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பணம் உள்ள நாடுகள் இந்த மந்த நிலையை சமாளித்துவிடுகிறது.
ஆனால், பொருளாதார பலமற்ற நாடுகள் பெரும் இழப்புகளை சந்திக்கிறது. அப்படியாகதான் இலங்கையும் மாட்டிக்கொண்டது. அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்தது, ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகமானது, தீவிரவாத தாக்குதல்கள், கொரோனா நெருக்கடி என மீளவே முடியாத சூழலில் இலங்கை சிக்கியது.
இது மக்கள் மத்தியில் பெரும் போராட்டங்களை தூண்டியது. போராட்டங்கள் கலவரங்களாக வெடித்தன. பெட்ரோல், அரிசி, கேஸ், காய்கறிகள், முட்டை, பால் என அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்தது. போதாக்குறைக்கு மின்வெட்டும் மக்களை வாட்டி வதைத்தது.
இவை அனைத்தும்தான் மக்களின் போராட்டத்திற்கு முக்கிய காரணமாகும். ஒரு கட்டத்தில் அதிபர் மாளிகையையே போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். இதனால் அதிபர் கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகி நாட்டை விட்டு தப்பினர்.
இப்படியாக பல்வேறு மாற்றங்களுக்கு பின்னர் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட தொடங்கினார். தற்போது நாடு முழுவதும் இயல்பு நிலை மெல்ல திரும்பி வருகிறது.
இதற்காக இந்தியா பேருதவிகளை செய்திருக்கிறது. இந்த உதவிக்கு ரணில் தொடர்ந்து நன்றி தெரிவித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் கொழும்பில் நடந்த இந்திய நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் கூட்டத்தில் இந்திய நாணயம் குறித்து அவர் பேசியிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
அதாவது, இந்தியா வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறி வருவதாகவும், இது இந்திய பெருங்கடலில் உள்ள நாடுகளையும் சேர்த்து வளர்ச்சிப்பாதையில் அழைத்து செல்வதாகவும் கூறியிருந்தார்.
மேலும், அமெரிக்க டாலரை போல இந்தியாவின் ரூபாயயை பொது நாணயமாக பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். இது இந்தியாவின் அந்நிய செலாவணியை மேம்படுத்த உதவும். இதன் மூலம் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்.” என்றார்.