சீனாவின் குறிக்கோள்களால் தெற்காசிய ஸ்திரத்தன்மைக்கு ஆபத்து நிலவுவதாக இந்தியாவின் பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் பிபின் ராவத் (Bipin Rawat) தெரிவித்துள்ளார்
அஸ்ஸாமின் குவாஹாட்டி நகரிலுள்ள குடிமைப்பணிகள் பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உலகின் சக்திவாய்ந்த நாடாவதற்காக தெற்காசியாவிலும் இந்திய பெருங்கடல் பகுதியிலும் மிகப்பெரிய ஆக்கிரமிப்பை சீனா மேற்கொண்டு வருவதாக இந்திய பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
புவி அரசியல் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான உத்திகளிலும் சீனாவின் போட்டியை காண முடிவதாக அவர் கூறியுள்ளார்.
அண்மைக் காலங்களில் பங்களாதேஷ் மற்றும் மியன்மார் ஆகிய நாடுகள் சீனாவின் இராணுவ உதவியை அதிகம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள ஜெனரல் பிபின் ராவத், நேபாளம், இலங்கை, மாலத்தீவிலும் குறிப்பிடத்தக்க அளவில் சீனா முதலீடுகளை மேற்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நாடுகளுக்கு சீனா புரியும் உதவிகள் இந்தியா மீது ஆதிக்கம் செலுத்துவதற்கான முயற்சி எனவும் இதனால் தெற்காசிய ஸ்திரத்தன்மைக்கு ஆபத்து நிலவுதாகவும் இந்திய பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி கூறியுள்ளார்.
தெற்காசிய பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க அயல் நாடுகளுடனான உறவை இந்தியா வலுப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அயல் நாடுகளுடனான பண்பாட்டு பிணைப்புகளை இந்தியா முழுமையாக பயன்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ள ஜெனரல் பிபின் ராவத், இந்தியா அயல் நாடுகளின் நிரந்தர நண்பன் என்பதை அறிவிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.