உக்ரைன் போருக்கு எதிராக சித்திரம் வரைந்த ரஷ்ய சிறுமியின் தந்தைக்கு சிறைத்தண்டனை

 உக்ரைன் மீதான போருக்கு எதிராக சித்திரம் வரைந்த ரஷ்ய சிறுமியின் தந்தைக்கு 02 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய இராணுவத்தை இழிவுபடுத்தியதற்காக இந்த சிறைத்தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தத் தீர்ப்பு வழங்கப்படும் போது 53 வயதான அலெக்ஸி மொஸ்கலெவ் எனும் பிரதிவாதி மன்றில் ஆஜராகியிருக்கவில்லை.

வீட்டுக்காவலில் இருந்து அவர் தப்பிச்சென்று விட்டதாக யெவ்றெமொவ் நீதிமன்றின் ஊடகச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

தமது கட்சிக்காரர் எங்கு இருக்கின்றார் என தமக்குத் தெரியாது என அலெக்ஸி மொஸ்கலெவ்- இன் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய கொடி நாட்டப்பட்டுள்ள நிலப்பரப்பிலிருந்து செல்லும் இரு ஏவுகணைகள், உக்ரைன் கொடி நாட்டப்பட்டுள்ள நிரப்பரப்பில் நிற்கும் பெண்ணொருவரையும் பிள்ளையொன்றையும் நோக்கிச் செல்வது போல அந்தச் சிறுமி பாடசாலையில் ஓவியமொன்றை வரைந்திருந்தார்.

இந்த நடவடிக்கை வேண்டாமென குறித்த பெண் சமிக்ஞை செய்வது போலவும் அந்த ஓவியத்தில் வரையப்பட்டுள்ளது.

இதனைப் பார்வையிட்ட அந்தப் பாடசாலையின் அதிபர் உடனடியாகவே பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

அதனையடுத்து 13 வயதான அந்தச் சிறுமியை தந்தையிடமிருந்து பிரித்துச் சென்ற பொலிஸார் அவரை இந்த மாத ஆரம்பத்தில் சிறுவர்கள் காப்பகமொன்றுக்கு அனுப்பியிருந்தனர்.

ரஷ்யாவின் தாக்குதல்களை விமர்சிக்கும் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் அந்தச் சிறுமியின் தந்தையையும் கைது செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here