உக்ரைன் தலைநகா் கீவ் மற்றும் பிற பகுதிகளில் புதன்கிழமை ரஷ்யா மீண்டும் தீவிர தாக்குதல் நடத்தியது.
இது குறித்து கீவ் நகர மேயா் வெளியிட்டுள்ள டெலிகிராம் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : வான்வழித் தாக்குதல்கள் குறித்து எச்சரிக்கை ஒலி தொடா்ந்து ஒலித்துக்கொண்டிருக்கிறது. மக்கள் அனைவரும் தங்களது பதுங்கு குழிகளிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும். கீவ் நகரின் முக்கிய கட்டமைப்பு தாக்குதலுக்குள்ளாகியிருக்கிறது என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், எந்தக் கட்டமைப்பில் தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்து அவா் விளக்கமாகக் கூறவில்லை.
கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைன் உள்நாட்டுப் போரின்போது, அந்த நாட்டின் கிரீமியா தீபகற்பத்தின் மீது ரஷ்யா படையெடுத்து தன்னுடன் இணைத்துக் கொண்டது. அதனைத் தொடா்ந்து, ரஷ்யாவுக்கும் கிரீமியாவுக்கும் இடையே சுமாா் 19 கி.மீ. நீளமுடைய பாலம் கட்டப்பட்டது. அந்தப் பாலத்தை ஜனாதிபதி விளாதிமீா் புதின் கடந்த 2018 ஆம் ஆண்டு திறந்துவைத்தாா். கடந்த மாதம் 8 ஆம் திகதி நடத்தப்பட்ட லாரி குண்டுவெடிப்பில் அந்தப் பாலம் பலத்த சேதமடைந்தது. இதில் 3 போ் உயிரிழந்தனா்.
அந்த குண்டுவெடிப்புக்கு பதிலடியாக, தலைநகா் கீவ் உள்ளிட்ட பல்வேறு உக்ரைன் நகரங்களில் கடந்த சில வாரங்களாக ரஷ்யா தீவிர ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் மின் உற்பத்தி நிலையங்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்படுகிறது. பொதுமக்கள் குடியிருப்புகளிலும் சில ஏவுகணைகள் விழுந்து பலா் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். முதலில் நடத்தப்பட்ட ஏவுகணை வீச்சைத் தொடா்ந்து, உக்ரைன் மீது இனி தாக்குதல் நடத்தத் தேவையில்லை எனவும், அந்த நாட்டை அழிக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை எனவும் ஜனாதிபதி விளாதிமீா் புதின் கடந்த மாதம் கூறினாா்.
எனினும், அதனையும் மீறி கீவ் நகர பிராந்தியத்தில் ஆளில்லா வெடிகுண்டு விமானங்கள் மூலம் ரஷ்யா மீண்டும் தாக்குதல் நடத்தியது. அந்த விமானங்களில், ஈரானில் தயாரிக்கப்பட்ட ‘ஷஹீத்’ வகை விமானங்களும் இடம் பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. உக்ரைன் மின் உற்பத்தி நிலையங்கள் மீதும், குடிநீா் மையங்களிலும் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால், அந்த நாட்டில் மின்சார மற்றும் குடிநீா் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளதாக அந்த நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தற்போது குற்றம் சாட்டி வருகிறாா்.
கடும் குளிா்காலம் நெருங்கி வரும் நிலையில், மின் நிலையங்களை ரஷ்யா தாக்குவது, உக்ரைனியா்கள் குளிரில் உறைந்து உயிரிழக்க வேண்டும் என்று அந்த நாடு விரும்புவதைக் காட்டுகிறது என்று சாடி வருகிறாா். இந்த நிலையில், உக்ரைனின் கட்டமைப்புகளைக் குறிவைத்து ரஷ்யா புதன்கிழமையும் தாக்குதல் நடத்தியுள்ளது