வேலூரில் காதல் திருமணம் செய்த கேரளத்தை சேர்ந்த வேலூர் தனியார் மருத்துவமனை பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
வேலூர் தொரப்பாடி பெரியல்லாபுரத்தை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார் இவரது மனைவி காயத்ரி (32). இவரும் அதே மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார்.
செல்வகுமாரின் சொந்த ஊர் தூத்துக்குடி, காயத்ரி கேரளம் மாநிலத்தை சேர்ந்தவர். இவர்கள் இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கும் குழந்தைகள் இல்லை.
இந்த நிலையில், கணவன் – மனைவி இருவரும் வெவ்வேறு நேரங்களில் பணிக்கு சென்று வந்துள்ளனர். இதனால் இருவரும் ஒன்றாக சேர்ந்து இருக்க முடியவில்லை என காயத்ரி மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், சொந்த வேலையாக செல்வகுமார் தில்லி சென்றிருந்த நிலையில் மனைவி காயத்ரி வீட்டில் தனியாக இருந்துள்ளார். செல்வகுமார் போனில் காயத்ரியை தொடர்பு கொண்டு உள்ளார். நீண்ட நேரமாகியும் போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்த செல்வகுமார் அவசரமாக விமானம் மூலம் திரும்பி அங்கிருந்து வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது, வீட்டின் கதவைத் தட்டியும் மனைவி காயத்ரி கதவை திறக்காததால் வீட்டின் உரிமையாளர் வீட்டின் வழியாக வீட்டிற்குள் நுழைந்து ஜன்னல் வழியாக பார்த்த போது காயத்ரி தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக தொங்கினார்.
இது பற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த பாகாயம் பொலிஸார் சடலத்தை கைப்பற்றி உடல் கூராய்வுக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக பொலிஸார் சம்பவ இடத்தில் நடத்திய முதல் கட்ட விசாரணையில், கணவனும் மனைவியும் சேர்ந்து வீட்டில் இருக்கும் நேரங்கள் குறைவு என்பதும், அதற்கு இருவரது பணி நேரம் காரணம் என்பதும், இதுகுறித்து அடிக்கடி காயத்ரி தனது கணவரிடம் பேசி வந்ததாகவும் தெரியவந்தது.
இது குறித்து பாகாயம் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், திருமணமான நான்கு ஆண்டுகளில் காயத்ரி தற்கொலை செய்து கொண்டதால் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.