அமெரிக்க கோடீஸ்வரரும் டெல்ஸா அமைப்பின் தலைமை செயலதிகாரியுமான எலான் மஸ்க், கடந்த ஏப்ரல் மாத பங்கு விலை நிலவரப்படி ரூ.3,42,000 கோடி (44 பில்லியன் அமெரிக்க டொலா்) மதிப்பில் ட்விட்டரை முழுமையாக கையகப்படுத்துவதற்கு அந்த ஊடக நிறுவனத்தின் இயக்குநா்கள் குழு ஒப்புதல் அளித்தது. அதன்படி ஒப்பந்தமானது. அதற்கு முன்னதாக ட்விட்டரில் 9 சதவீத பங்குகளை வாங்கியிருந்த எலான் மஸ்க் அந்நிறுவனத்தின் மிகப் பெரிய பங்குதாரராக இருந்தாா்.
இந்நிலையில், திடீரென ட்விட்டா் நிறுவனத்தை வாங்க மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக எலான மஸ்க் கடந்த ஜூலை 10 ஆம் திகதி அறிவித்தாா்.
முன்னதாக, ட்விட்டா் பணியாளா்களுடன் காணொலி மூலம் பேசிய எலான் மஸ்க், ட்விட்டா் சமூக வலைதளத்தில் போலிக் கணக்குகள் குறித்த முழு புள்ளிவிவரம், புதிய போலிக் கணக்குகள் உருவாவதைத் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் எனவும் ட்விட்டரைக் கையகப்படுத்துவதற்குத் தடையாக பல பிரச்னைகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் எலான் மஸ்க் ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கியுள்ளதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்தது. மேலும், ஒப்பந்தத்தின்படி அவர் நிறுவனத்தை கண்டிப்பாக வாங்க வேண்டும் என்று ட்விட்டரின் வாரியத் தலைவர் பிரட் டெய்லர் தெரிவித்தார்.
இதனிடையே இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல கால்பந்துக் கழகமான மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகத்தை வாங்க தயாராக இருப்பதாக எலான் மஸ்க் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். ஆனால், இதுகுறித்து டெஸ்லா பங்குதாரர்கள் இது உண்மைதானா? எனக் கேள்வி எழுப்பியதும் ‘இல்லை. இது நகைச்சுவைக்காக. நான் எந்த விளையாட்டு அணியையும் வாங்கப்போவதில்லை’ என பதிலளித்தார்.
இந்த நிலையில், எலான் மஸ்குக்கு ட்விட்டர் நிறுவனத்தை விற்பது தொடர்பாக தன் பங்குதாரர்களிடையே பொது வாக்கெடுப்பை நடத்த அந்நிறுவனம் முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், எலான் மஸ்க்கிற்கு ட்விட்டரை ரூ.3.50 லட்சம் கோடிக்கு முழுமையாக கையகப்படுத்துவதற்கு பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
ட்விட்டரை வாங்கும் எலான் மஸ்க்கின் ஒப்பந்தத்திற்கு ஆதரவாக அந்நிறுவன பங்குதாரர்கள் வாக்களித்துள்ளனர்.