யுக்ரேனில் சில முக்கிய நகரங்களில் மீண்டும் போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது.
கீயவ், கார்கிவ், சுமி, மேரியோபோல் நகரங்களில் இன்று காலை 7 மணி முதல் பொதுமக்கள் வெளியேற வசதியாக இந்த போர் நிறுத்தம் கடைப்பிடிக்கப்படும் என்று ரஷ்ய அரசு ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த போர் நிறுத்த நேரத்தில் பொதுமக்கள் வெளியேற வசதியாக மனிதாபிமான வழித்தடங்கள் செயல்படும் என்று ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நான்கு நகரங்களுமே கடுமையான ரஷ்யத் தாக்குதலுக்கு தற்போது இலக்காகிவருகின்றன. எனினும், இந்த போர் நிறுத்த அறிவிப்பை யுக்ரேன் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
மேரியோபோல் நகரில் இப்படி மனிதாபிமான வழித்தடம் அமைக்கும் இரண்டு முயற்சிகள் ஏற்கெனவே தோற்றுள்ளன.
ஒப்புக்கொள்ளப்பட்ட போர் நிறுத்த நேரத்திலும்கூட ரஷ்யா தொடர்ந்து குண்டு வீசித் தாக்கியதாகவும், இதனால்தான் இது தோற்றதாகவும் யுக்ரேன் அதிகாரிகள் கூறுகின்றனர்.