இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பயணித்த பஸ்ஸில் துப்பாக்கி தோட்டாக்கள் l இந்தியாவில் விசாரணை தீவிரம்

இந்தியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி வீரர்கள் பயணித்த பஸ்ஸிலிருந்து வெற்று துப்பாக்கி தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கும் இடையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது.

இதன் முதல் போட்டி பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெற உள்ளது.

இந்த போட்டிக்காக இலங்கை டெஸ்ட் அணி மொஹாலிக்கு விஜயம் செய்து, தற்போது பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இலங்கை அணி நேற்று முன்தினம் (26) பயிற்சிகளுக்காக பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்த போது, பஸ்ஸில் துப்பாக்கி தோட்டாக்கள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, பஸ்ஸில் இருந்த வெற்று துப்பாக்கி தோட்டாக்களை பொலிஸார் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளனர்.

குறித்த பஸ் தனியார் ஒருவரிடமிருந்து வாடகைக்கு எடுக்கப்பட்டதாக அந்த நாட்டு தகவல்கள் குறிப்பிடுகின்றன.

சம்பவம் தொடர்பில் பொலிஸார், பஸ்ஸின் சாரதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த பஸ், இலங்கை அணிக்கு வாடகைக்கு வழங்கப்படுவதற்கு முன்னதாக, திருமண நிகழ்வொன்றுக்கு வாடகைக்கு வழங்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

பஞ்சாபில், திருமணங்களில் மகிழ்ச்சிக்காக துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதாகவும், அந்த நேரத்தில் இந்த இரண்டு துப்பாக்கி தோட்டாக்களும் பஸ்ஸில் விடப்பட்டிருக்க வேண்டும் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here