
சிலர் அதிகமாகச் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள், வேறு சிலர் எதையும் சாப்பிடுவதற்குத் தயங்குவார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு உண்ணுதல் கோளாறு என்ற நோய் இருக்க வாய்ப்புள்ளது எனக் கூறுகிறார்கள் நிபுணர்கள்.
கொரோனா தொற்று பரவத் தொடங்கிய பிறகு இத்தகைய சிக்கல் ஏராளமானோருக்கு வந்திருப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
“உண்ணுதல் கோளாறு அல்லது Eating Disorder என்பது வெறும் உடல் ரீதியான பிரச்னையில்லை. இது முற்றிலும் மன நலம் சார்ந்த பிரச்னை என்கிறார்” மனநல மருத்துவர் வந்தனா.
மிக மகிழ்ச்சியாக இருக்கும்போதோ அல்லது கவலையாக இருக்கும்போதுதான் இந்தப் பிரச்னை அதிகமாக வருகிறது. பெரும்பாலும் பதின்ம வயதில்தான் இந்தப் பிரச்னைக்கு அடித்தளமிடப்படுகிறது. அதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் உண்ணுதல் கோளாறு அதிகமாக இருக்கிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு அமைப்பு (CDC) நடத்திய ஆய்வின்படி, உயர் நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளில் 15 சதவிகிதம் பேருக்கும் மாணவர்களில் 4 சதவிகிதம் பேருக்கும் உண்ணுதல் குறைபாடு இருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது. கொரோனா காலத்தில் இது அனைத்து வயதினர் மத்தியிலும் பரவலாக இருக்கிறது.
“வீட்டில் எப்போதும் சலிப்பாக இருப்பது, உடல் உழைப்பு ஏதுமில்லாத சோம்பலான நிலை போன்றவையே இதற்குக் காரணம். அடுத்ததாக இந்தக் காலத்தில் உணவைப் பார்த்து உணர்ந்து, முழு உணர்வு நிலையுடன் சாப்பிடும் வழக்கம் குறைந்து கொண்டே வருகிறது. இதுவும் உண்ணுதல் கோளாறுக்கு காரணமாகிறது” என்கிறார் வந்தனா.
பெரும்பாலானவர்களுக்கு பிறக்கும்போதே உண்ணுதல் கோளாறுக்கான காரணிகள் இருக்கலாம். சுற்றியிருக்கும் சூழல்தான் பெரும்பாலும் இதற்குக் காரணமாகிறது. சுற்றியிருப்பவர்களைப் பார்த்து ஏற்படும் பழக்கங்களும், இந்தக் கோளாறுக்கு அடிப்படையாக இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
உண்ணுதல் கோளாறு பெரும்பாலும் மூன்று வகையாகப் பிரிக்கப் படுகிறது. இதல் முதலாவது வகை அனோரெக்சியா. அடுத்தது புலிமியா. மற்றொன்று அதிகமாக உண்ணும் Binge Eating. அனோரெக்சியாவை இதைப் பசியின்மை என்று கூறலாம்.
“அனோரெக்சியா கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள், எப்போதும் தங்களது உடல் எடையைப் பற்றியே கவலை கொண்டிருப்பார்கள். எதையாவது சாப்பிட்டால் உடை எடை கூடிவிடும் என்று அஞ்சுவதால், எதையுமே சாப்பிடுவதைத் தவிர்ப்பார்கள். அதிலும் குறிப்பாக கொழுப்பு உணவுகளை முற்றிலுமாக தவிர்த்துவிடுவார்கள். இப்படி உணவைத் தவிர்ப்பதாலேயே இவர்கள் உடல் எடை குறைந்து மெலிந்து காணப்படுவார்கள். எடுத்துக் கொண்ட கலோரியைக் குறைப்பதற்காக தீவிரமான முறைகளைக் கடைப்பிடிப்பார்கள்”
உண்ணுதல் குறைபாட்டில் மற்றொரு வகை புலிமியா. இவர்களுக்கு உண்ணுவதில் கட்டுப்பாடு கிடையாது. அதனால் கண்டதையும் சாப்பிட்டுவிட்டு அதில் இருந்து மீண்டு வர முயற்சி செய்வார்கள்.
“புலிமியாவா கோளாறு இருப்பவர்கள், சாப்பிட்ட பிறகு செயற்கையாக வாந்தியெடுப்பது, மலமிளக்கி மருந்துகளை அதிக அளவில் பயன்படுத்துவது போன்ற வழக்கங்களைக் கொண்டிருப்பார்கள். உண்ணாவிரதம் இருந்து சாப்பிட்ட உணவைச் சமப்படுத்தவும் முயற்சிப்பார்கள். எனினும் அனோரெக்சியா போல் அல்லாமல் இவர்கள் ஓரளவு சரியான அல்லது சற்று அதிகமான உடல் எடையைக் கொண்டிருப்பார்கள்” என்கிறார் வந்தனா.
மூன்றாவது வகை அளவுக்கு அதிகமாக உண்ணுவது. இதை Binge Eating என்கிறார்கள்.
“இனிமேல் சாப்பிடவே முடியாது என்ற அளவுக்கு மூச்சு முட்ட சாப்பிடுவது இவர்களது வழக்கம். பசியே இல்லாவிட்டாலும் உண்பதை இவர்களால் நிறுத்த முடியாது. மற்றவர்கள் ஏதும் நினைத்துக் கொள்வார்கள் என்பதால், பெரும்பாலும் தனியே உண்பது இவர்களது வழக்கம். அதன் பிறகு அதை ஈடுகட்டுவதற்கான எந்த முயற்சியிலும் ஈடுபடமாட்டார்கள். அதிகமா உண்ட பிறகு அதை நினைத்து இவர்களுக்கு குற்றவுணர்ச்சி ஏற்படுகிறது. இதுவே மனநலக் கோளாறாகிவிடுகிறது. இந்தவகைக் கோளாறு பெரும்பாலும் இளம்பெண்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. இதற்குக் காரணம் பொதுமனநிலையில் பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதுதான் காரணம்” என்கிறார் மனநல ஆலோசகர் வந்தனா.
இது பொதுவாக மேலை நாடுகளில்தான் இதுதான் அதிகம் என்ற தவறான கருத்து உள்ளது. அது இந்தியாவிலும் அதிகமாக இருக்கிறது. ஆனால் இப்போது மேலை நாடு கீழை நாடு என்ற வேறுபாடு ஏதும் இல்லை. உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உண்ணுதல் கோளாறு இருக்கிறது. இந்தியாவில் இது பரவலாகக் காணப்படுகிறது.
உண்ணுதல் கோளாறு மனச் சோர்வு காரணமாகவே வருகிறது. இவர்கள் தன்னம்பிக்கை குறைந்தவர்களாக இருப்பார்கள். இவர்களது உடலைப் பற்றி யாராவது விமர்சனம் செய்திருப்பார்கள். விளைவுகளைப் பற்றிய முன்சிந்தனையில்லாமல் சட்டென செயல்களைச் செய்பவர்களாக இருப்பார்கள்.
“இத்தகைய கோளாறுகளுக்கு மூளையில் உள்ள ஒரு பகுதியே காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் மனநல மருத்துவர்களை நாட வேண்டும். இதற்கான மருந்துகளைக் கொடுத்த அவர்கள் குணப்படுத்துவார்கள். கூடவே மனநல ஆலோசகர்கள், தன்னம்பிக்கைக் குறைபாட்டை சரிசெய்யும் பயிற்சியளிக்கிறார்கள்.” என்கிறார் வந்தனா.
உண்ணுதல் கோளாறு தொடர்பான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் மிகவும் குறைவு என்று கூறும் வந்தனா, “மருத்துவம் படிக்கும் ஒரு மாணவியேகூட இதுபற்றிய புரிதல் இல்லாமல் மிகுந்த தயக்கத்துடன் என்னிடம் ஆலோசனை கேட்பதற்காக வந்தார்” என்று கூறுகிறார்.
“உணவுடன் தொடர்புடையது என்பதால் பெரும்பாலும் வயிறுக் கோளாறு ஏற்படுகிறது. அதனால் வயிறு தொடர்பான மருத்துவர்களிடம் சிகிச்சைக்காகச் செல்கிறார்கள். அங்கு எதுவுமே இல்லை என்று தெரிந்த பிறகுதான் மனநல மருத்துவரையோ, ஆலோசகரையோ அணுகுகிறார்கள்”.