மேல் மாகாணத்தில் அதிகரித்துவரும் சிக்குன்குன்யா!

மேல் மாகாணத்தில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோய் பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் அதுல லியனபத்திரன தெரிவித்தார்.

மேல் மாகாணத்தின் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இந்த நோய்கள் அதிகமாகக் காணப்படுவதாக தற்போது தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிக்குன்குன்யா மற்றும் டெங்கு காய்ச்சலின் ஆரம்பக்கட்ட அறிகுறிகள் ஒரே மாதிரியாக காணப்படும் எனவும், காய்ச்சல், தலைவலி, உடல் வலி மற்றும் வாந்தி ஏற்படக்கூடும் என்றும் வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டியதோடு, அறிகுறிகள் இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால், விரைவில் வைத்தியரை சந்தித்து தகுந்த சிகிச்சை பெற வேண்டுமெனவும் தெரிவித்தார்.

மேலும், சிக்குன்குன்யா நோய் பெரும்பாலும் உடல் வலியை ஏற்படுத்துவதால், வலியைக் குறைக்க வலி நிவாரணிகளை உட்கொள்வதைத் தவிர்க்குமாறு விசேட வைத்திய நிபுணர் அதுல லியனபத்திரன பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார். ஏனெனில், அவற்றை உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் மிகவும் கடுமையானதாக இருக்கும். அதன்படி, காய்ச்சல் மற்றும் வலியைக் குறைக்க முடிந்தவரை பரசிட்டமோல் (Paracetamol) மாத்திரைகளைப் பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

தண்ணீர், பழச்சாறு, கஞ்சி, ஜீவனி போன்றவற்றை குடிப்பதன் ஊடாக, நீரிழப்பைத் தடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டினார்.

அறிகுறிகள் தோன்றினால், அது டெங்குவா அல்லது சிக்குன்குன்யாவா என்பதை சரியாகக் கண்டறிய முடியாது என்றும், தொடர்புடைய நோய்களைக் கண்டறிய வைத்திய ஆலோசனையைப் பெறுவது முக்கியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

சிக்குன்குன்யா நோயால் பாதிக்கப்பட்ட பிறகு, சில நோயாளிகள் நீண்டகால மூட்டு வலி போன்ற அறிகுறிகளை அனுபவிக்கக்கூடும் என்பதால், இதற்கு முறையான சிகிச்சை தேவை என்றும், எனவே வைத்திய ஆலோசனையைப் பெற வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here