பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் போது எதிர்கொள்ளும் சவால்களின் தன்மை மற்றும் அளவு என்பன ஒரு பொருட்டல்ல என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில் வல்லுநர்களுடனான முதலாவது மாநாடு, ஜனாதிபதி மாளிகையில் நேற்று மாலை இடம்பெற்றது. இதன்போதே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி அவர்கள் எதிர்பார்க்கும் இலக்கை அடைவதற்குத் தேவையான பலத்தைப் பெற்றுக்கொடுத்து, தேசிய வேலைத்திட்டத்தை வெற்றிகொள்வதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக, இந்த மாநாட்டில் கலந்துகொண்டிருந்த தொழில் வல்லுநர்கள் தெரிவித்தனர்.
ஜனாதிபதி; ஆரம்பிக்கப்பட்ட புதிய விவசாயப் புரட்சிக்கு, அந்தத் துறைகளில் முழுநேரம் வேலை செய்யும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோரின் ஆதரவை, தேவைப்படும் எந்நேரத்திலும் வழங்கத் தயாராக இருப்பதாகத் துறைசார் நிபுணர்கள் தெரிவித்தனர்.
மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வலுக்களை நோக்கி நகர்வதற்கான தேவையை எடுத்துரைத்த நிபுணர்கள், அதற்காகப் பிரவேசிக்கும் போது எதிர்கொள்ளும் தடைகளைத் தகர்த்தெறிய, அரசாங்கத்துக்கு நிபந்தனையற்ற உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகக் கூறினர்.