பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தின் முர்ரி மற்றும் அதற்கு அருகாமை பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு காரணமாக, வாகனங்களில் சிக்கி, குறைந்தது 22 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என, மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
`மலைகளின் இளவரசி` என அழைக்கப்படும் முர்ரி மலைப்பிரதேசம், குளிர்காலங்களில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.இம்மறை இப்பிரதேசத்தில் வெப்பநிலை 08 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைந்ததை அடுத்து கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பஞ்சாப்பின் முர்ரி மற்றும் அதற்கு அருகாமை பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு காரணமாக 20 இற்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடும் பனிப் பொழிவு காரணமாக, தங்கள் கார்களுக்குள் பயணிகள் இருந்த நிலையில், மூச்சுத் திணறல் ஏற்பட்டதே இவர்களின் இறப்புக்குக் காரணம் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ள பகுதிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத் – முர்ரி நெடுஞ்சாலை மூடப்பட்டு, முர்ரி மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளில் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகள் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.