அரசாங்கத்திற்கு ஆதரவளித்த 7 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் அரசாங்கம் எடுக்கவுள்ள தீர்மானம்

20வது திருத்தச் சட்டம் மற்றும் வரவு செலவுத் திட்டத்தில் ஏழு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு ஆளும் தரப்பு பக்கத்தில் ஆசனம் ஒதுக்குவது குறித்து சபாநாயகர் தீர்மானிக்க வேண்டும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

‘எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர்; 20 வது திருத்தத்திற்கு வாக்களித்தனர், அதே போல் வரவு செலவுத் திட்டத்திற்கும் வாக்களித்தனர். நாடாளுமன்றத்தில் ஒரு பக்கம் 112 ஆசனங்களும் மறுபுறம் 113 ஆசனங்களும் உள்ளன. எனினும் தற்போது ஆளும் தரப்பில் 150 பேர் உள்ளனர். ஆனால் 113 ஆசனங்களே ஆளும் தரப்பு பக்கத்தில் உள்ளன, அனைவரும் ஒரே பக்கத்தில் அமர்வதற்கு சந்தர்பம் இல்லையென்றாலும் அவர்கள் எங்களை ஆதரிக்கிறார்கள்,’ எனத் தெரிவித்தார்.

இந்த ஏழு எம்.பி.க்களுக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்கும் திட்டம் உள்ளதா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் ரமேஷ் பத்திரன, இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here