Home SPORTS இரு நாடுகளின் தலைவிதியைத் தீர்மானிக்கும் ஆட்டம் இன்று!

இரு நாடுகளின் தலைவிதியைத் தீர்மானிக்கும் ஆட்டம் இன்று!

0
இரு நாடுகளின் தலைவிதியைத் தீர்மானிக்கும் ஆட்டம் இன்று!

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இலங்கையில் நடைபெறவுள்ள போட்டிகளை நிறைவு செய்யும் வகையில், போட்டியை நடத்தும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (28) இரவு 7.00 மணிக்கு பல்லேகலவில் ஆரம்பமாகவுள்ளது. 

இங்கிலாந்திடம் நேற்று (27) நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து தோல்வியடைந்ததையடுத்து, இரண்டாவது குழுவிலிருந்து அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் அணியைத் தீர்மானிப்பதில் இப்போட்டி மிகவும் தீர்மானமிக்கதாக மாறியுள்ளது. 

இலங்கையைப் பொறுத்தவரை இது ஒரு ஆறுதல் வெற்றியாக அமைந்தாலும், இப்போட்டியின் முடிவே பாகிஸ்தான் அல்லது நியூசிலாந்து அணிகளின் இம்முறை உலகக் கிண்ணத் தொடரின் அடுத்தகட்ட நகர்வைத் தீர்மானிக்கும். 

தற்போதைய நிலவரப்படி, புள்ளிகள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள நியூசிலாந்து அரையிறுதி வாய்ப்பை அண்மித்துள்ளது. 

அதன்படி, நியூசிலாந்தை முந்தி பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தகுதி பெற வேண்டுமாயின், அவர்கள் இன்று முதலில் துடுப்பெடுத்தாடினால் இலங்கைக்கு எதிராக குறைந்தது 64 ஓட்டங்களினால் வெற்றி பெற வேண்டும். 

அவ்வாறின்றி இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடினால், இலங்கை நிர்ணயிக்கும் இலக்கை அதிகபட்சம் 13.1 ஓவர்களுக்குள் பாகிஸ்தான் எட்ட வேண்டும். 

பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தகுதி பெற்றால், அரையிறுதிப் போட்டியும் இலங்கையில் நடைபெறும். அவ்வாறு இல்லையெனில், இம்முறை உலகக் கிண்ணத் தொடரில் இலங்கையில் நடைபெறும் இறுதிப் போட்டியாக இன்றைய போட்டி அமையும். 

இலங்கை – பாகிஸ்தான் இருபதுக்கு 20 போட்டி வரலாறு 19 ஆண்டுகளைக் கொண்டதுடன், இதுவரை இரு நாடுகளுக்கும் இடையில் 29 போட்டிகள் நடைபெற்றுள்ளன. 

இதில் இலங்கை 12 வெற்றிகளைப் பெற்றுள்ள அதேவேளை, பாகிஸ்தான் 17 வெற்றிகளைப் பெற்றுள்ளது. அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையில் இலங்கையில் 8 போட்டிகள் நடைபெற்றுள்ளன. 

அதில் இலங்கை 3 போட்டிகளில் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளதுடன், 5 போட்டிகளில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக திறமையின் அடிப்படையில் பாகிஸ்தான் முன்னிலையில் உள்ளது. 

எனினும், இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடர்களில் ஐந்து முறை இரு அணிகளும் மோதியுள்ளன. அதில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளைப் பெற்றுள்ளன. 

2012 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடருக்குப் பிறகு இரு அணிகளும் உலகக் கிண்ணத் தொடரில் மோதிக்கொள்ளவில்லை. அதன்படி 14 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று உலகக் கிண்ணப் போட்டியில் இவை நேருக்கு நேர் மோதவுள்ளன. 

இதேவேளை, இலங்கை அணியில் இன்று ஒரு மாற்றம் ஏற்படக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் காயமடைந்த குசல் மெண்டிஸ் இன்றைய போட்டியில் விளையாடமாட்டார் எனக் கூறப்படுகிறது. 

இதனால் கமில் மிஷார விக்கெட் காப்பாளராக மீண்டும் அணியில் இணையவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here