காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் பெருக்கெடுக்கும் அளவை எட்டியுள்ளதாக அந்த நீர்த்தேக்கங்களுக்கு பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாக பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதையடுத்து விமலசுரேந்திர, லக்ஷபான, நியூ லக்ஷபான, கெனியன் மற்றும் பொல்பிட்டிய நீர்மின் நிலையங்களில் நீர்மின் உற்பத்தி அதிகபட்ச கொள்ளளவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இன்று (08) முதல் அடுத்த சில தினங்களில் மழையுடனான வானிலையில் சற்று அதிகரிப்பு எதிர்பார்க்கப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும்.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளையில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரியுள்ளது.