கண்டியில் தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது

க.பொ.த சாதாரண தர ஆங்கில மொழி வினாத்தாளை புகைப்படம் எடுத்து, வட்ஸ்அப் குரூப்களில் வெளியிட்ட சம்பவம் தொடர்பாக தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினர் குறித்த ஆசிரியரை கண்டியில் வைத்து இன்று (12) கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முதற்கட்ட விசாரணையில் வாட்ஸ்அப் குழுவில் 1,025 உறுப்பினர்கள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

க.பொ.த சாதாரண தர பரீட்சையின் ஆங்கில வினாத்தாள் கடந்த 9ம் திகதி நடைபெற்றதுடன், கால அட்டவணைப்படி காலை 8.30 மணிக்கு மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டது.

எனினும், சந்தேகத்திற்குரிய இந்த ஆசிரியரால் காலை 9.11 மணியளவில் வாட்ஸ்அப் குழுவில் ஆங்கில வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரான தனியார் வகுப்பு ஆசிரியர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பரீட்சை திணைக்கள அதிகாரிகளிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவின் மேற்பார்வையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை கடந்த 06 ஆம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here