கடும் வெப்பநிலை குறித்து எச்சரிக்கை

Background for a hot summer or heat wave, orange sky with with bright sun and thermometer

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று (06) மேலும் உயர்ந்து “கடும் அவதானம்” செலுத்தப்பட வேண்டிய நிலைக்கு அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களில் இவ்வாறு வெப்பநிலை உயர் மட்டத்தில் இருக்கும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்தின் சில இடங்களிலும் வெப்பமானது அதிக அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

போதுமான அளவு நீர் அருந்துதல், நிழலான பகுதிகளில் முடிந்த அளவு ஓய்வெடுத்தல், கடுமையான வெளிப்புறச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துதல் போன்ற சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் என்று திணைக்களத்தின் முன்னறிவிப்பு பிரிவின் பிரதி பணிப்பாளர் மெரில் மெண்டீஸ் தெரிவித்தார்.

இதற்கிடையில், அதிக சூரிய ஒளி காரணமாக தலைவலி, வாந்தி, உடல்வலி, தூக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றக்கூடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் கடும் வெப்பமான இந்த நாட்களில் பரீட்சை நிலையங்களுக்கு தயாராக வருமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரியுள்ளது.

குறிப்பாக, முடிந்த அளவு தண்ணீர் அருந்துமாறும், பரீட்சை நிலையங்களில் தங்களுடைய இடத்தில் கடுமையான வெயில் படும் இடம் இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here