கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் காணப்படும் மரங்களை ஆராய்வதற்காக 7.4 மில்லியன் ரூபா செலவில் கொள்வனவு செய்யப்பட்ட இயந்திரம் தற்போது முழுமையாக பழுதடைந்துள்தாக கொழும்பு மாநகர சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு மாநகர எல்லைக்குள் காணப்படும் மரங்கள் தொடர்பில் ஆராயும் வகையில், மரங்களை ஸ்கேன் செய்யும் இயந்திரம் (Tree Scanner) 2015ம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
இந்த இயந்திரத்தின் ஊடாக மரமொன்றின் ஆயுள் காலத்தை அறிந்துகொள்ள முடியும் என்பதுடன், அந்த மரம் தொடர்பான பல வகை தரவுகளை சேகரித்துக் கொள்ளவும் முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், இந்த இயந்திரம் மூலம் பெற்றுக் கொள்ளப்படும் தரவுகளை ஆராயும் திறன் கொண்ட அதிகாரிகள் இல்லைமையினால், குறித்த இயந்திரம் பயன்படுத்தப்படாது தற்போது பழுதடைந்துள்ளதாக அறிய முடிகின்றது.
கொழும்பு – கொள்ளுபிட்டி பகுதியில் நேற்று முன்தினம் பஸ் ஒன்றின் மீது மரமொன்று முறிந்து வீழ்ந்தமையினால் ஐவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது