இந்திய விண்வெளி ஆய்வின் வரலாற்று நிகழ்வாக சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவப் பகுதியில் தடம் பதித்தது.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் நிலவுக்கு விண்கலன் அனுப்பியதில் தோல்வியை தழுவிய நிலையில், இந்தியாவின் சந்திரயான் -3 விண்கலம் நிலவில் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது.
சந்திரயான் -2 தோல்விக்கு பிறகு, பல்வேறு மாற்றங்களுடன் சந்திரயான்-3 விண்கலத்தை வடிவமைத்து, எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 14 ஆம் திகதி இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.
பல்வேறு கட்ட பயணங்களுக்கு பின்னா் நிலவின் சுற்றுப் பாதையில் விண்கலம் பயணித்தது. சந்திரயான் 3-இல் உள்ள உந்து கலனில் இருந்து லேண்டா் கலன் கடந்த 17 ஆம் திகதி விடுவிக்கப்பட்டது.
நிலவுக்கும் லேண்டர் கலனுக்கும் இடையேயான தூரத்தை பல்வேறு கட்டங்களாக படிப்படியாக இஸ்ரோ குறைத்தது. இறுதியில், குறைந்தபட்சம் 25 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 134 கி.மீ தொலைவும் கொண்ட சுற்றுப் பாதையில் லேண்டர் கொண்டுவரப்பட்டது.
பின்னர் நிலவின் தரையிலிருந்து 150 மீட்டா் உயரத்துக்கு லேண்டா் கொண்டுவரப்பட்டது. சில விநாடிகள் அந்த நிலையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர், அதிலுள்ள சென்சாா்கள் மூலம் தரையிறங்க சரியான சமதள பரப்புடைய இடம் தோ்வு செய்யப்பட்டது.
லேண்டரின் வேகம் பூஜ்ஜிய நிலையை எட்டியதும், மெதுவாக நிலவில் தரையிறக்கும் முயற்சியை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.
இந்த முயற்சி பலன் அளித்ததால், சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது.
சந்திரயான் -3 திட்டம் வெற்றி பெற்றதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கோஷமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஒருவரையொருவர் ஆரத்தழுவி மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.
சந்திரயான் -3 திட்டம் வெற்றி பெற்றதால், புதிய இந்தியா உருவாகியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்