மாத்தளை – எல்கடுவ பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, மக்களைத் தூண்டும் வகையில் பொதுப் பிரதிநிதியொருவர் பொறுப்பற்ற வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
தற்காப்புக்காக வன்முறைக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்றும், அரசும் சட்டமும் நம்மை பாதுகாக்கவில்லை என்றால் அதை மீட்பது நமது உரிமை என்று பொது பிரதிநிதி ஒருவர் தெரிவித்திருந்ததை அமைச்சர் டிரான் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, மாத்தளை – எல்கடுவ – ரத்வத்தை பகுதியில் தோட்ட தொழிலாளர் ஒருவரின் வீட்டை உடைத்த சம்பவத்தில் அமைச்சர் ஜீவன் தொண்டமானும் அதிரடியான கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
அத்துடன், தாக்குதல் நடத்தினால், தற்பாதுகாப்புக்காக பதில் தாக்குதல் நடத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனும் கருத்து வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“மக்கள் பிரதிநிதி இந்த கருத்துக்களை வெளியிட்டிருந்தமை சமூக வலைத்தளங்கள் ஊடாக பெரும் பரப்புரை செய்யப்பட்டிருந்தது.
இவ்வாறான வெறுப்புப் பேச்சுக்களுக்கு ஆளாகாமல் சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் என ஒட்டுமொத்த மக்களையும் பொது பாதுகாப்பு அமைச்சர் அன்புடன் கேட்டுக்கொள்கிறார்.
மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் குறுகிய நோக்கத்துடன் சில அரசியல்வாதிகள் வெளியிடும் கருத்துக்களுக்கு பலியாகி எவரேனும் சட்டத்தை கையில் எடுத்து செயற்பட்டால் அல்லது அதற்கு துணைபோனால், சட்டம் தண்டிக்கும் என பொது பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
எந்த ஒரு நபர் அல்லது அமைப்புக்கு எதிராக அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் கண்டிப்பாக சட்டம் அமல்படுத்த வேண்டும் என்றார்.