13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்! பாராளுமன்றில் ஜனாதிபதி

நாட்டின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையில் வலியுறுத்தினார்.

இதனை அடைவதற்கு திறந்த மனதுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தி, பாராளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இன்று பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறியதாவது ,

13 ஆவது திருத்தத்தில் உள்ள குறைபாடுகளை நாங்கள் பார்க்கவேண்டும்.ஏனைய நாடுகளின் அதிகாரப் பகிர்வை நாங்கள் ஆராய வேண்டும்.வருடாந்தம் மாகாண சபைகளுக்கு 500 மில்லியன் ரூபா செலவிடப்படுகிறது. அதனால் நன்மைகள் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.

ஆனாலும் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை புறந்தள்ள முடியாது. எனவே அது தொடர்பான எனது யோசனைகளை நான் முன்வைத்துள்ளேன்.பாராளுமன்றம் அதனை ஆராய்ந்து தீர்மானமொன்றை எடுக்க வேண்டும்.

மாகாண சபைகள் ஊடாக மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது வேண்டும். எனவே அரசியலமைப்பு திருத்தம் செய்து மக்களுக்கு ஏற்ற வகையில் தீர்மானமொன்றை எடுத்தல் அவசியம். மாகாண சபை முறைமையை அரசியலமைப்பிலிருந்து நீக்கிவிடக் கூடாதென்பது ஏகமானதான கருத்தாக இருக்கிறது.

இது வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மட்டுமல்ல.நாட்டின் அனைத்து மாகாணங்களுக்கும் பொதுவானது. மக்களுக்கு தேவைப்படும் வகையில் இதனை மாற்றியமைக்க வேண்டியதாக இருக்கிறது.மாகாண சபை சட்டத்திலும் திருத்தங்களை செய்யவேண்டும். மாகாண சபை தேர்தலை இதன் பின்னர் நடத்த வேண்டும்.

இதர அதிகாரங்கள் குறித்து முதலில் பேசி பின்னர் பொலிஸ் அதிகாரங்கள் குறித்து பேசுவோம். இலகுவான விடயங்களை முதலில் ஆராய்ந்து பின்னர் கடினமான விடயங்களை ஆராய்வோம்.

உலகளாவிய ஆதரவுடன் ஒருமித்த கருத்தை எட்டுவதன் மூலம், தேசம் தனது அடையாளத்தைப் பாதுகாக்கவும், ஒற்றுமையை மேம்படுத்தவும், அதிக அதிகாரங்களை பரவலாக்கவும் முடியும்.

அரசாங்கம் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் எதிர்ப்பது என்ற பாரம்பரிய நடைமுறையில் இருந்து எதிர்க்கட்சிகள் விலகிச் செல்ல வேண்டும் . – என்றும் வலியுறுத்தினார் ஜனாதிபதி விக்கிரமசிங்க கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here