தனிமைப்படுத்தப்படுவோரில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு மாத்திரம் 10,000 ரூபா நிவாரணப் பொதி

தனிமைப்படுத்தப்படுவோரில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு மாத்திரம் 10,000 ரூபா நிவாரணப் பொதி

Colombo (News 1st) தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாத்திரம் 10,000 ரூபா நிவாரணப் பொதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணி சுற்றுநிரூபம் ஒன்றை வௌியிட்டுள்ளது.

அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்காக இந்த சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் 10,000 ரூபா பெறுமதியான நிவாரணப் பொதி வழங்க வேண்டியது அத்தியாவசியம் இல்லை என அந்த சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்காலத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாத்திரம் 10,000 ரூபா பெறுமதியான நிவாரணப் பொதியை வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி செயலணியால் வௌியிடப்பட்டுள்ள சுற்றுநிரூபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விமர்சித்துள்ளார்.

முடக்கப்பட்டுள்ள பல நாடுகள் தமது மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில், இலங்கையில் நிவாரண பொதியையும் நிறுத்தும் செயற்பாடு இடம்பெறுவதாக எதிர்க்கட்சித் தலைவரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உணவுச்செலவை சுமக்க முடியாத நாடுகளின் வரிசையில் ஐந்தாவது இடத்திலுள்ள இலங்கையின் மக்கள், தமது சம்பளத்தின் 66 சதவீதத்தை உணவுக்காக செலவளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனி, தேங்காய் எண்ணெய் மோசடி மூலம் தமது நண்பர்களுக்கு சலுகைகளை வழங்கிய அரசாங்கமே மக்களை அர்ப்பணிப்பு செய்யுமாறு கோருவதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒருவேளை உணவைக் கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலையிலுள்ள மக்களிடம் தியாகங்களை செய்யுமாறு கோருவது மிகவும் கொடிய செயல் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here