Home LOCAL கட்சி அரசியலை புறந்தள்ளி, மக்களின் உணவுப் பிரச்சினைக்கு தீர்வு காண உறுதி கொள்வோம் – ஜனாதிபதி அம்பாறையில் தெரிவித்தார்.

கட்சி அரசியலை புறந்தள்ளி, மக்களின் உணவுப் பிரச்சினைக்கு தீர்வு காண உறுதி கொள்வோம் – ஜனாதிபதி அம்பாறையில் தெரிவித்தார்.

0
கட்சி அரசியலை புறந்தள்ளி, மக்களின் உணவுப் பிரச்சினைக்கு தீர்வு காண உறுதி கொள்வோம்  – ஜனாதிபதி அம்பாறையில் தெரிவித்தார்.

சம்பிரதாய கட்சி அரசியலை புறந்தள்ளி, உணவுப் பாதுகாப்பை உருவாக்குவதன் மூலம் மக்களின் உணவுப் பிரச்சினையைத் தீர்க்கும் வேலைத்திட்டத்தில் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
கிராமிய பொருளாதார மையங்களை வலுவூட்டும் பல்துறை ஒருங்கிணைந்த பொறிமுறை தொடர்பில் அம்பாறை மாவட்டத்திற்கான அரச அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு இன்று (15) முற்பகல் அம்பாறை ஹார்டி உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இதுவரை நாம் மிகவும் கடினமான காலகட்டத்தை எதிர்கொண்டிருந்தாலும் எவரும் பட்டினியால் வாட அனுமதிக்கப்பட மாட்டார்களென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அத்துடன் இந்த செயற்திட்டத்தை வெற்றி கொள்வதன் மூலம் உலக உணவு நெருக்கடிக்கு முகங்கொடுக்கக்கூடியதாக இருக்கும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
உணவு பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதேவேளை அடுத்த வருடம் முதல் விவசாயம் நவீனமயப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
கிராமிய பொருளாதார மறுமலர்ச்சி நிலையங்களை வலுப்படுத்துவதற்கான பலதரப்பு கூட்டுப் பொறிமுறையை அமுல்படுத்துவது, அம்பாறை மாவட்டத்தை அபிவிருத்தியடைந்த சமூகத்துடன் வளமான மாவட்டமாக மாற்றுவது என்பன மூலம் உணவுப் பாதுகாப்பையும் போஷாக்கையும் உறுதிப்படுத்துவது குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

நாட்டின் நெல் உற்பத்தியில் 22% அம்பாறை மாவட்ட விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படுவதுடன், எதிர்வரும் போகங்களில் வெற்றிகரமான அறுவடையை முன்னெடுப்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட அரச அதிகாரிகளிடம் களப்பணியில் அவர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் மற்றும் சிரமங்கள் தொடர்பில் ஜனாதிபதி நேரடியாக கேட்டறிந்தமை விசேட அம்சமாகும்.
அம்பாறை மாவட்டத்தில் நிலவும் விவசாய மற்றும் கடற்றொழில் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. அவற்றை செவிமடுத்த ஜனாதிபதி, அவை தொடர்பில் ஆராய்ந்து உடனடி நடவடிக்கை எடுப்பதற்காக விசேட குழுவொன்றை நியமிக்குமாறும் சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
இக்கலந்துரையாடலின் பின்னர், ஹார்டி பண்ணை வளாகத்தை பார்வையிட்ட ஜனாதிபதி, பண்ணை வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here