மகாராஷ்டிர மாநிலத்தில் மசூதிகளில் வைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என்று மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை தலைவா் ராஜ் தாக்கரேயின் கருத்தை எனது இந்திய குடியரசு கட்சியும் (அதாவலே), பாஜகவும் ஆதரிக்கவில்லை என்று மத்திய சமூக நீதித் துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே தெரிவித்தாா்.
முன்னதாக, மசூதிகளில் 5 வேளையும் ஒலிபெருக்கிகளை அதிக ஓசையுடன் பயன்படுத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்த ராஜ் தாக்கரே, மே 3 ஆம் திகதியுடன் மசூதியில் இருந்து ஒலிபெருக்கிகள் அகற்றப்பட வேண்டும். இல்லையென்றால் மசூதிக்கு எதிரே ஹனுமன் சாலீசா பாடலை அதிக ஓசையுடன் ஒலி பெருக்கி மூலம் இசைப்போம் என்று எச்சரிக்கை விடுத்தாா்.
மகாராஷ்டிரத்தில் ஆளும் சிவசேனை – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கூட்டணி ராஜ் தாக்கரேயின் இந்த அறிவிப்புக்குக் கண்டனம் தெரிவித்தது. இதன் பின்னணியில் பாஜக இருப்பதாகவும் அவா்கள் குற்றம்சாட்டினா்.
இந்நிலையில், மத்திய அமைச்சா் ராம்தாஸ் அதாவலே இது தொடா்பாகக் கூறியதாவது: மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்தப்படுவது தொடா்பாக பாஜக எவ்வித எதிரான நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. அனைவருக்குமான வளா்ச்சி என்பதே பிரதமா் நரேந்திர மோடியின் கொள்கையாக உள்ளது. பாஜகவும் எனது கட்சியான இந்திய குடியரசு கட்சியும் (அதாவலே) ராஜ் தாக்கரேவின் கோரிக்கையை ஆதரிக்கவில்லை. ராஜ் தாக்கரே தனது அரசியல் ஆதாயத்துக்காக இதுபோன்று பேசி வருகிறாா்.
ராஜ் தாக்கரே விரும்பினால், அவரும் ஒலிபெருக்கி பயன்படுத்தலாம். ஆனால், மசூதியில் ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது என்று அவரால் வலியுறுத்த முடியாது என்றாா்