டொலர் பற்றாக்குறை மிகவும் மோசமாகியுள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வர்த்தகங்கள் வீழ்ச்சியடைந்து வருவதாகவும், வேலைகள் இழக்கப்படுவதாகவும், நடுத்தர வர்க்கத்தினர் சீரழிந்து வருவதாகவும், விவசாயிகள் நலிவடைந்து வருவதாகவும், இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
கொவிட் தொற்றுநோய் இருந்தபோதிலும், பல நாடுகள் 2020-2021 ஆம் ஆண்டில் பொருளாதார முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன என்றும் தெரிவித்தார்.
இந்த தருணத்தில் அரசாங்கத்தின் முக்கிய கடமை சர்வதேச நாணய நிதியத்திடம் சென்று உதவி பெறுவது அல்லது ஏற்றுக்கொள்ளக்கூடிய மாற்றீட்டை முன்வைப்பது எனவும் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இரண்டுமே இதுவரை நடக்கவில்லை எனவும், நாட்டு மக்கள் தற்போது கோபமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தற்போதைய நிலைமை தொடர்ந்தால் அடுத்த வருடம் தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் கடுமையான உணவுத் தட்டுப்பாட்டை நாடு எதிர்நோக்க நேரிடும் என்பதுடன் மக்கள் கிளர்ச்சி வெடிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
அவ்வாறான கிளர்ச்சி அரசாங்கத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், இதனால் நிலைமையை தடுக்க முறையாக வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.