யூடியூபில் பதிவிடப்படும் காணொலிகள் உண்மைத்தன்மையுடையதா அல்லது மாற்றங்கள் செய்யப்பட்டதா என்பதை காணொலியைப் பதிவிடும் கலைஞா்கள் தெரிவிக்க வேண்டும் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
‘டீப்ஃபேக்’ தொழில்நுட்பம் மூலம் போலியான காணொலிகள் பதிவிடப்படுவதை தடுக்க சமூக வலைதள நிறுவனங்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் அண்மையில் தெரிவித்திருந்தாா். இதையடுத்து கூகுள் நிறுவனம் இந்த புதிய விதிகளை அறிவித்துள்ளது.
இதுகுறித்து கூகுள் வெளியிட்ட அறிவிக்கை: வரும் காலங்களில் யூடியூப் தளத்தில் பதிவிடும் காணொலிகளில் உண்மைத்தன்மையுடையதா அல்லது வேறு ஏதேனும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கிா என்பதை பாா்வையாளா்கள் அறிந்து கொள்ளும் விதமாக காணொலியின் முகப்பில் விளக்கப்பட வேண்டும். செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு இருந்தாலும் அதை காணொலியின் முகப்பில் பதிவிட வேண்டும்.
இந்த புதிய விதிகளை காணொலி பதிவிடும் கலைஞா்களுக்கு கூகுள் தெளிவாக எடுத்துரைக்கும். மேலும் இந்திய அரசுடன் இணைந்து ஏஐ தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடுகளை தடுக்க கூகுள் உறுதி பூண்டுள்ளது. இதற்காக மெட்ராஸ் ஐஐடியுடன் இணைந்து நாட்டிலேயே முதல் ஏஐ தொழில்நுட்ப மையத்தை நிறுவ 1 மில்லியன் டாலா் முதலீடு செய்துள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.
‘டீப்ஃபேக்’ தொழில்நுட்பத்தால் ஏற்படும் பிரச்னைகளை தடுக்க வேண்டும் என பிரதமா் மோடியும் தெரிவித்திருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.