சுனாமி பேரலைக்கு இன்றுடன் 17 வருடங்கள் பூர்த்தி

அமைதியான கடலலைகளை யாராலும் வெறுக்க முடியாது. மனதிற்கு இதத்தையும் நிம்மதியையும் கொடுக்கும் கடல் அலைகளின் அகோரமான சுயரூபத்தை 2004 ஆம் ஆண்டு டிசம்பர் வரையில் எவரும் பார்த்திருக்க முடியாது.

கிறிஸ்மஸ் பண்டிகையின் கொண்டாட்டங்கள் நிறைவடையாத நிலையில் தோன்றி இலட்சக்கணக்கான உயிர்களை காவுகொண்ட சுனாமி பேரலைக்கு இன்றுடன்; 17 வருடங்கள் பூர்த்தியாகின்றன.

2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி, இது போன்ற ஒரு தினத்தில் ஒட்டு மொத்த உலகையும் உலுக்கச் செய்தது சுனாமி எனும் ஆழிப்பேரலை.
2004 ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் உள்ள கடல்பகுதியில் அதிகாலை வேளையில் திடீரென ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது.
அக்கால தரவுகளின்படி குறித்த நிலநடுக்கமானது 9.1 தொடக்கம் 9.3 ரிக்டர் அளவிற்கு பதிவாகியது.

சாதாரண கடல் அலைகள் 1-2 மீற்றருக்கு காணப்படும் நிலையில் சுனாமியின் போது பதிவு செய்யப்பட்ட அலையின் அளவு 30 மீற்றராகும்.
இந்த சுனாமி மூலம் 14 நாடுகள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இதன் மூலம் ஏற்பட்டிருக்கும் இழப்புக்களும் கொஞ்சமல்ல.
சுனாமியால் அதிகளவு பாதிக்கபட்ட நாடு இந்தோனேஷியாவாகும்.
அது உட்பட இலங்கை, இந்தியா, தாய்லாந்து போன்ற நாடுகளும் பாரிய சேதத்தைத் சந்தித்தன.

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் மூலம் 227 000 ற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளதுடன் 125 000 ற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்து சமுத்திரத்தையே புறட்டிப் போட்ட இந்த சுனாமியின் ஆதிக்கம் இலங்கையும் விட்டு வைக்கவில்லை.

சுனாமியால் தெற்குக் கரையோர மக்கள் அதிகளவு பாதிக்கபட்டனர். குறிப்பாக ஹம்போந்தோட்டை, மாத்தறை, காலி போன்ற மாவட்டங்களில் அதிக இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

இலங்கையில் சுனாமியினால் சுமார் 40 000 ற்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. அத்துடன் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளதுடன் எண்ணிலடங்காதவர்கள் காயமடைந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து காலி நோக்கிப்பயணித்த புகையிரம் ஒன்று சுனாமியால் அடித்துச் செல்லப்பட்டமையால் பயணிகள் உட்பட அண்மித்திருந்த குடியிருப்புகளிலும் பலரது உயிர்கள் பறிக்கப்பட்டது. இதன்மூலம் எண்ணிலடங்காதவர்கள் காணாமல் போயுள்ளனர். இது வரையில் இடம்பெற்ற மோசமான புகையிரத விபத்துக்களில் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது.

சுனாமியின் கோரத்தால் பலர் தமது சொத்துக்கள் மற்றும் சொந்தங்களை இழந்து உடைமைகளை இழந்து அழுத குரல்களின் கதைகளை இன்று கேட்கும் போதும் மனதை உருகிடச் செய்யும்.

ஆழிப்பேரலை ஆழ்த்திய சோகங்கள் என்றும் அழியாத வடுக்களாய் அனைவருடய மனதிலும் ஆழப்பதிந்துள்ளன.
உலக மக்களாலும் இலங்கையர்களாலும் இந்நாளில் உயிர் நீத்த தமது சொந்தங்களை நினைவுகூர்ந்து நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது.

காலங்கள் கடந்திருந்தாலும் நாம் இழந்த சொந்தங்களின் நினைவுகளும் சுனாமியின் பேரழிவுகளும் என்றும் எம் நினைவுகளில் இருந்து அகற்ற முடியாதவை தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here