சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு முதல் முறையாக முற்றிலும் வணிக ரீதியான பயணம் ஒன்று தொடங்கியுள்ளது. இதில் செல்லும் 4 பயணிகளும் 8 நாள்களுக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருப்பார்கள்.
இந்த நான்கு பேரும் Axiom-1 பணியாளர்கள் என்று அழைக்கப்படுவர். ஆக்சியம் என்பது வணிக ரீதியான விண்வெளி பயண நிறுவனம். அடுத்த சில ஆண்டுகளில் தனக்கென தனியாக ஒரு விண்வெளி நிலையத்தை கட்ட இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த நான்கு பேரையும் சுமந்துகொண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் ராக்கெட் அமெரிக்காவின் கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி 11.17க்கு கிளம்பியது. அவர்கள் நான்கு பேரும்
ராக்கெட்டில் இந்த 4 பயணிகள் இருக்கும் எண்டவர் என்ற குமிழ் சனிக்கிழமை அன்று சர்வதேச விண்வெளி நிலையத்தோடு இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாசாவின் முன்னாள் விண்வெளி வீரரான மைக்கேல் லோபஸ்-அலெக்ரியா தலைமையில் இந்த பயணக்குழு செல்கிறது.
இவர் தவிர மற்ற மூவரும் பெரும் பணக்காரர்கள். அவர்கள் தொழில்முறை விண்வெளி வீரர்கள் அல்ல.
அமெரிக்க ரியல் எஸ்டேட் தொழில் அதிபரும் ஏரோபேடிக் பைலட்டுமான லேரி கன்னோர், இஸ்ரேல் முதலீட்டாளரும் கொடையாளருமான எய்டன் ஸ்டிப்பே, கரீபியன் பகுதியை சேர்ந்த தொழில் முனைவோர், முதலீட்டாளர், கொடையாளர் மார்க் பதி ஆகியோர்தான் மைக்கேல் தலைமையில் சென்றுள்ள மூன்று பணக்காரர்கள்.
இவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 8 நாட்கள் தங்கியிருந்து அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்வார்கள்.
இந்த ஆக்சியம் நிறுவனம் 2016ல் உருவாக்கப்பட்டது. தாழ் புவிவட்டப் பாதையில் வணிகரீதியான நடவடிக்கைக்கு வாய்ப்பு ஏற்பட்டிருப்பதை கணித்து இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. சுற்றுலா முதல் தயாரிப்பு வரையில் பல்வேறுவிதமான வாய்ப்புகள் இதில் அடக்கம்.
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அடுத்தடுத்து இது போன்ற பல பயணங்களை இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் அடுத்த பயணத்துக்கு ஆக்சியம் 2 என்று பெயர். இந்த இரண்டாவது பயணம் இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திலோ நடக்கும். ஒரு தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் இந்தப் பயணத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்வார்கள்.
சர்வதேச விண்வெளி நிலையத்தின் அமெரிக்கப் பிரிவுடன் தனது விண் குமிழ் ஒன்றை இணைக்க நாசாவுடன் இந்த நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையம் கைவிடப்படுவதற்கு முன்பாக இந்த விண் குமிழியை அடிப்படையாக கொண்டு இந்த நிறுவனம் ஒரு தனியார் விண்வெளி நிலையத்தைக் கட்டமைக்கும்