லிபியாவில்அகதிகள் கப்பல் மூழ்கியதால் கரை ஒதுங்கிய 10 உடல்கள்

லிபியாவின் கடலோர பகுதியில் அகதிகள் கப்பல் ஒன்று கவிழ்ந்ததில் குறைந்தது 90 பேர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று ஐ.நா கூறியுள்ளது.

கடலில் மூழ்கியவர்களில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்று அந்த படகு விபத்தில் இருந்து தப்பிய மூவர் கூறியுள்ளனர். அவர்களில் இருவர் லிபியாவைச் சேர்ந்தவர்கள்.

பத்து பேரின் உடல்கள் லிபிய கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கி உள்ளதாக குடியேற்றத்துக்கான சர்வதேச அமைப்பு கூறியுள்ளது. அவர்களில் எட்டுப்பேர் லிபியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் இருவர் பாகிஸ்தானியர்கள் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

இத்தாலிக்கு செல்லும் ஆபத்தான பயணத்தை பாகிஸ்தானியர்கள் அதிக அளவில் மேற்கொள்வதாக அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

ஐரோப்பிய கண்டத்தின் தெற்கு பகுதிகளை கடல் வழியாக அடைய நினைப்பவர்களுக்கு லிபியா ஒரு முக்கியப் போக்குவரத்து வழியாக உள்ளது.

இத்தாலிக்கு அகதிகள் மற்றும் தஞ்சம் கோருபவர்களை சுமந்து செல்லும் கப்பல்களைத் தடுக்க லிபிய கடலோர காவல் படைக்கு உதவுவதற்கான ஒரு சர்ச்சைக்குரிய ஒப்பந்தத்தை, கடந்த ஆண்டு லிபியாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் கையெழுத்திட்டது.

இந்த ஆண்டு இது வரை 6,624 பேர் கடல் வழியாக ஐரோப்பா வந்துள்ளதாக குடியேற்றத்துக்கான சர்வதேச அமைப்பு கூறியுள்ளது. இதே காலகட்டத்தில் 2017இல் இந்த எண்ணிக்கை 5,983ஆக இருந்தது. 2018இல் இதுவரை உலகம் முழுவதும் 246 தஞ்சம் கோரிகள் இறந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்று கருதப்படுகிறது.

Chart

சர்வதேச தொண்டு நிறுவனங்களும், ஐ.நா-வும் இதை மனிதாபிமானமற்ற செயல் என்று விமர்சித்தன.

தஞ்சம் கோருபவர்கள் லிபியாவால் மோசமாக நடத்தப்படுவதற்கு ஐரோப்பிய நாடுகளின் அரசுகளும் உடந்தை என்று மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நேஷனல் குற்றம் சாட்டியிருந்தது.

லிபியாவைச் சேர்ந்தவர்கள் அந்த ஆபத்தான கடல் பயணங்களை அதிகம் மேற்கொள்வதில்லை. கடந்த ஆண்டு ஆவணப்படுத்தப்பட்ட சில சம்பவங்களிலும் அவர்கள் சிலரை மட்டுமே சுமந்து செல்லும் சிறிய படகுகளையே பயன்படுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *