வரலாறு காணாத சேதம் விளைவித்த ‘தாமஸ் தீ’

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் 700க்கும் மேற்பட்ட வீடுகள் உள்பட 1,000 கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. ‘தாமஸ் தீ’ என்று பெயரிடப்பட்டுள்ள இத்தீ அம்மாகாண வரலாற்றிலேயே மிகப்பெரிய தீ என்று குறிப்பிடப்படுகிறது.

கோரமான இந்த தாமஸ் தீ, 1000 சதுர கிலோ மீட்டருக்கும் மேலான பரப்பளவை எரித்துள்ளது. இது நியூயார்க், ப்ரசல்ஸ் மற்றும் பாரிஸ் ஆகிய நகரங்களின் மொத்த பரப்பளவை விட அதிகமானதாகும்.

அடிக்கடி காட்டுத்தீயால் பாதிக்கப்படும் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஒவ்வொரு காட்டுத் தீ சம்பவத்துக்கும் பெயரிடும் வழக்கம் உள்ளது.

டிசம்பர் மாத தொடக்கத்தில் அமெரிக்காவின் சான்டா பவுலா என்ற இடத்தில் வெடித்த இந்த தாமஸ் தீ மேற்கு நோக்கி கடலோர பகுதிக்கு நகர்ந்துள்ளது. சமீப காலங்களில், ஏற்பட்ட மிகப்பெரிய காட்டுத்தீக்களில் இதுவும் ஒன்று.

இத்தீயை கட்டுக்குள் கொண்டுவர ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் களத்தில் உள்ளனர்.

கலிஃபோர்னியாவின் பல பெரிய காட்டுத்தீ சம்பவங்கள், இந்த நூற்றாண்டில்தான் பதிவாகியுள்ளன. வெப்பமடைந்து வரும் காலநிலை மற்றும் காட்டுப்பகுதிகளில் கட்டப்படும் கட்டடங்களும் இதற்கு காரணம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

2003 ஆம் ஆண்டு சான் டியாகோ மாகாணத்தில் 2,73,246 ஏக்கர் பரப்பளவை எரித்து சாம்பலாக்கிய ‘செடான் தீப்பிழம்பே’ இதுவரை பெரியதாக கருதப்பட்டது. அந்த அளவை தற்போது கடந்துள்ள தாமஸ் தீ, அந்த மாகாண வரலாற்றிலேயே மிகப்பெரிய தீயாகப் பதிவாகியுள்ளது.

ஆயிரம் கட்டடங்களை சேதப்படுத்தி, ஒரு தீயணைப்பு வீரரின் உயிரையும் தாமஸ் தீ பறித்துள்ளது.

தீயணைப்பு வீரர்கள்

மழை மற்றும் குறைந்த காற்றால் இந்த தீ பரவும் வேகம் தற்போது குறைந்துள்ளது.

65 சதவீதம் அளவுக்கு தாமஸ் தீ அணைக்கப்பட்டுவிட்டதாகவும், தொடர்ந்து தீயின் வேகம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்நாட்டு தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.

கலிஃபோர்னியாவில் ஏற்பட்ட 10 மிகப்பெரிய காட்டுத்தீ நிகழ்வுகளில் ஏழு நிகழ்வுகள் 2000 ஆம் ஆண்டிற்கு பிறகு நிகழ்ந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *