சீரற்ற வானிலையால் தென் பகுதியில் கடும் சேதம்

இலங்கையின் தென்மேற்கு பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக நாட்டின் தென் பகுதிகளில் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

சீரற்ற வானிலையினால் நேற்று (புதன்கிழமை) மாலை முதல் தென்மேற்கு பகுதியில் கடும் மழையுடன், கடும் காற்று வீசி வருகின்றது.

இதனால் ஏற்பட்ட பல்வேறு அனர்த்தங்கள் காரணமாக காயமடைந்த 11 பேர் தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள பணியாளர் ஒருவர் கூறினார்.

பலத்த மழையினால், பல வீடுகள் பகுதி அளவிலும், முழு அளவிலும் சேதமடைந்துள்ளதாக இடர் முகமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடக பேச்சாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்தார்.

சமீபத்தில் இலங்கை கடல் பரப்பில் ஏற்பட்டுள்ள தாழ்வுநிலை, தற்போது கொழும்பிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் மணிக்கு 60 முதல் 70 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், அங்கு நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 8 மாவட்டங்களில் மின் விநியோகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சகத்தின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார்.

மின்கம்பங்கள் உடைந்து வீழ்ந்துள்ளதுடன், மின்கம்பிகளின் மீதும் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வீழ்ந்துள்ள மரங்கள்

அத்துடன், பாதிக்கப்பட்டுள்ள மின்விநியோகத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், சீரற்ற வானிலை காரணமாக களனி, கரையோர மற்றும் மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன.

பாதிக்கப்பட்டிருந்த கரையோர ரயில் சேவைகள் சரிசெய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகமையாளர் விஜய சமரசிங்க குறிப்பிட்டார்.

வீழ்ந்துள்ள மரங்கள்

மலையகத்திலுள்ள மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

மலையகத்திலும் கடும் மழையுடன் கூடிய வானிலை நிலவி வருகின்றது.

இந்நிலையில், மேல், சபரகமுவ, ஊவா, தென் மாகாணங்களின் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சர் அகில காரியவசம் தெரிவித்தார்.

மேலும், நாட்டின் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன், கட்டிடங்கள், வாகனங்கள் பல சேதமடைந்துள்ளன.

கடலுக்கு செல்லுவோர் மிக எச்சரிக்கையுடன் செயல்படுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *