வீட்டை விட்டு அனுப்பியதால் காணாமல் போன சிறுமி

கேரள தம்பதியரின் குழந்தை காணாமல் போன வழக்கு விசாரணையின் போது, ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் டெக்சஸ் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த மாத துவக்கத்தில், டெக்சஸில் ஒரு தந்தை மகளை தண்டிப்பதற்காக அதிகாலை மூன்று மணியளவில் வீட்டின் வெளியே குழந்தையை நிற்க வைத்த போது ஷெரின் மேத்யூ என்ற அந்த குழந்தை காணாமல் போனாள்.

கண்டெடுக்கப்பட்டுள்ள உடல், குழந்தையின் உடலாக இருக்கலாம் என்று ரிச்சர்ட்சன் காவல் துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட இந்த தம்பதி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஷெரினை ஒரு காப்பகத்தில் இருந்து தத்து எடுத்தனர்.

குழந்தையின் வீட்டில் இருந்து அரை மைல் தூரத்தில் உள்ள சுரங்கப்பாதையில் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தை `குற்றம் நடந்த இடமாக` பாவித்து விசாரணை நடப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உடல் யாருடையது என்பதை கண்டறியும் பணிகள் நடப்பதாக, பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில், அது வேறு யாருடைய உடலாக இருக்க கூடும் என்று எண்ணுவதற்கு, `எந்த காரணமும் இல்லை` என்கிறது காவல்துறை.

குழந்தையின் தந்தையான வெஸ்லி மேத்யூஸ், கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். குழந்தை பால் குடிக்க மறுத்ததற்காக அதிகாலை 3மணிக்கு, வீட்டை விட்டு வெளியேற்றியதன் மூலம் குழந்தையின் உயிருக்கு ஆபத்து விளைவித்ததை அதன் அந்த தந்தை ஒப்புக்கொண்டார்.

சம்பவம் நடக்கும் போது, குழந்தையின் தாய் தூங்கிக்கொண்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தை தொடர்ந்து, இந்த தம்பதியின் நான்கு வயது மகள், குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தனது மகளுக்கு வளர்ச்சியில் குறைபாடு உள்ளது என்றும், குறைவான வார்த்தைகள் மட்டுமே பேசுவார் எனவும் காவல்துறையிடம் வெஸ்லி மேத்யூஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், குழந்தை ஊட்டச்சத்து குறைபாடோடு இருந்ததாகவும், அதனால் அவளுக்கு அடிக்கடி உணவு அளிக்க வேண்டும் என குறிப்பிட்ட அவர், ஏமாற்றத்தின் வெளிப்பாட்டால் அவ்வாறு நடந்துகொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

குழந்தை காணவில்லை என்று அடுத்த 15 நிமிடத்தில் தெரிந்துகொண்டதாக கூறியுள்ள அவர், குழந்தை காணவில்லை என்ற கவலை அவ்வளவாக இல்லாததால், மீண்டும் வீட்டினுள் சென்று துணிகளை துவைத்ததாக தெரிவித்துள்ளார்.

தாய் மீது எந்த வழக்கும் பதிவுசெய்யாத போதிலும், விசாரணைக்கு இந்த பெற்றோர் ஒத்துழைப்பதில்லை என்று முன்னதாக காவல்துறை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *