வெலிக்கடை சிறை சம்பவம்: ‘புதிய விசாரணை ஆரம்பம்’

2012 ம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலைக்குள் அரச பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூடு காரணமாக 27 கைதிகள் மரணமடைந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து தற்போது போலீசார் புதிதாக விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளதாக சட்ட மா அதிபர் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்..

இந்த கொலைகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்யும்படி அரசாங்கதிற்கு உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு சிறை கைதிகளின் உரிமைகளுக்காக போராடும் அமைப்பின் தலைவர் சுதேஷ் நந்திமால் டி சில்வா தாக்கல் செய்த மனு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோதே சட்ட மா அதிபர் இதனை அறிவித்தார்.

சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த இந்த சம்பவம் குறித்து குற்ற புலனாய்வு திணைக்களம் விசேட விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்த அரச தரப்பின் வழக்கறிஞர் இதன்படி சில முக்கிய வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

சுதேஷ் நந்திமால் டி சில்வா

விசாரணைகளில் சில முன்னேற்றங்கள் காணப்படுவதாக கூறிய அவர் அதனை அடுத்த வழக்கு தினமன்று நீதிம்னறத்தில் அறிவிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

இதன்படி மனுவை அடுத்த டிசம்பர் மாதம் 6-ஆம் தேதியன்று மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றங்களை அறிவிக்குமாறு அரச தரப்பிற்கு உத்தரவிட்டனர்.

முன்னாள் ராணுவ தளபதியும் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

வழக்கு விசாரணை முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிறை கைதிகளின் உரிமைகளுக்காக போராடும் அமைப்பின் தலைவர் சுதேஷ் நந்திமால் டி சில்வா கடந்த மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த இந்த கொலைகள் குறித்து முறையான விசாரணைகளை மேற்கொள்ள அந்த அரசாங்கம் தவறியதாக குற்றம்சாட்டினார்.

ஆனால் தற்போதைய அரசாங்கமும் இந்த விசாரணைகளை துரிதமாக முன்னெடுக்க தவறியுள்ளதாக குற்றம்சாட்டிய அவர், இறந்த கைதிகளுக்கு நஷ்டஈடு வழங்குவதன் மூலம் மட்டும் நியாயத்தை வழங்க முடியாதென்று கூறினார்.

இதற்கு பொறுப்புக்கூற வேண்டிய சந்தேக நபர்களை அடையாளம் கண்டு அவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்தும் வரை தங்களது போராட்டம் தொடருமென்றும் அவர் கூறினார்.

இந்த கொலைகளுக்கு கடந்த ஆட்சியின் பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய கோத்தாபய ராஜபக்ஷ உட்பட உயர் பாதுகாப்பு அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதே போன்று வெலிக்கடை கைதிகளின் கொலைகளுக்கு அப்போது ராணுவ தளபதியாக கடமையாற்றிய ஜெனரல் ஜகத் ஜெயசூரிய பொறுப்புக் கூற வேண்டுமென்று முன்னாள் ராணுவ தளபதியும் அமைச்சருமான சரத் பொன்சேகா அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *