புகைப் பழக்கத்திலிருந்து ஆண்களை விடுவிக்க ஐந்தாண்டு திட்டம்

இலங்கையில் புகைத்தல் பழக்கத்திலிருந்து ஆண்களை விடுவிக்கும் ஐந்தாண்டு வேலைத் திட்டமொன்று சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆய்வுகளின் படி ஆண்களில் இருவரில் ஒருவர் புகைத்தல் பழக்கமுடையவர்கள் என உள்நாட்டில் இனம் காணப்பட்டுள்ள நிலையில் 2030-ம் ஆண்டு அந்த விகிதத்தை 5 சதவீதமாக குறைப்பதே இதன் நோக்கம் என சுகாதார அமைச்சு கூறுகின்றது.

உலக சுகாதார தாபனத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் இந்த வேலைத் திட்டத்திற்கு பிரிட்டன் 20மில்லியன் அமெரிக்க டாலரை நன்கொடையாக வழங்க முன் வந்துள்ளது.

ஆண்களை புகைத்தல் பழக்கத்திலிருந்து விடுவிக்கும் வகையில் 15 நாடுகளில் ஐந்தாண்டு வேலைத் திட்டம் உலக சுகாதார தாபனத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கை அதில் முதலிடத்தில் உள்ளதாக உலக சுகாதார தாபனம் கூறுகின்றது.

புகையிலை பாவனையை கட்டுப்படுத்தல் தொடர்பாக இலங்கை அரசினால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத் திட்டங்களிலும் அது தொடர்பான சட்டங்களை அமுல் படுத்துவதிலும் முன்னேற்றத்தை காண முடிவதாகவும் உலக சுகாதார தாபனம் குறிப்பிடுகின்றது.

இலங்கை

இலங்கையில் தற்போது சுமார் 35 ஆயிரம் பேர் புகையிலை செய்கையில் ஈடுபட்டுள்ளனர். 2020ம் ஆண்டு புகையிலை செய்கையை முற்றாக நிறுத்த சுகாதார அமைச்சு எதிர்பார்க்கின்றது.

உள்நாட்டில் புகைத்தல் பழக்கம் காரணமாக வருடாந்தம் 25 ஆயிரம் பேர் மரணமடைகின்றார்கள். 5 சதவீதமான பிள்ளைகளும் அதனால் பாதிப்புக்குள்ளாகுவதாக கூறுகின்றார் சுகாதார அமைச்சரான டாக்டர் ராஜித சேனாரத்ன

“இலங்கையில் ஏற்கனவே சிகரெட் பெட்டிகளில் 80 சதவீதம் படத்துடன் கூடிய புகைத்தல் பற்றிய எச்சரிக்கை அச்சிடப்பட்டுள்ளது. புகையிலைக்கு 90 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. உலகிலே புகையிலைக்கு அதிக வரி இலங்கையில்தான் விதிக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

அரசாங்கத்தின் இதுபோன்ற நடவடிக்கைகளினால் உள்நாட்டில் புகைத்தல் பழக்கமுடையவர்களின் எண்ணிக்கை தற்போது 46 சதவீதமாக வீழ்ச்சி கண்டுள்ளதாக சுகாதார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

“எதிர்காலத்தில் மேலும் சில நடவடிக்கைகளை சட்ட ரீதியாக முன்னெடுக்கவுள்ள நிலையில் இந்த சதவீதத்தை மேலும் குறைக்க முடியும்” என்கின்றார் டாக்டர் ராஜித சேனாரத்ன.

“குறிப்பாக கடைகளில் தனியாக சிகரெட் விற்பனை முற்றாக தடை செய்யப்படவுள்ளது” என்றும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

“எதிர்காலத்தில் எவ்வித படமும் இன்றி வெறும் வெள்ளையாக சிகரெட் பெட்டி அறிமுகம் செய்யப்படும் , பள்ளிக்கூடங்கள் அமைந்துள்ள இடத்திலிருந்து 500 மீற்றர் எல்லைக்குள் சிகரட் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய சட்ட ரீதியாக தடை செய்யப்படும்” என்றும் இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்டார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *