ரோஹிஞ்சா நெருக்கடி: ஐ.நா.வின் ராகைன் பயணத்தை ரத்து செய்த மியான்மர் அரசு

மியான்மரின் ராகைன் மாகாணத்தில் பெருமளவிலான ரோஹிஞ்சா முஸ்லிம்கள் வெளியேறிய விவகாரத்தில், அந்த மாகாணத்தை நேரில் பார்ப்பதற்காக ஐ.நா. மன்றம் மேற்கொண்டிருந்த திட்டத்தை மியான்மர் அரசாங்கம் ரத்து செய்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி வன்முறை தொடங்கிய பிறகு, முதல் முறையாக அப்பகுதியை பார்வையிட ஐநா திட்டமிட்டிருந்தது.

ரோஹிஞ்சா போராளிகள் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை தாக்கிய பிறகு, மியான்மர் ராணுவம் ரோஹிஞ்சாக்கள் மீது தாக்குதலை தொடங்கியபோது, அங்கிருந்து ஐ.நா.வின் பார்வையாளர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்கள்.

ரோஹிஞ்சா நெருக்கடி

யங்கோனில் உள்ள ஐ.நா செய்தித்தொடர்பாளர் ஒருவர், மியான்மர் அரசாங்கம் வெளியேறுவதற்கான காரணத்தை அளிக்கவில்லை என்று கூறினார்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 400,000 ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மியான்மரை விட்டு வங்காகதேசத்திற்கு குடிபெயர்ந்ததற்கான காரணம் குறித்து புலன் விசாரணை நடத்துவதற்காக ராகைன் மாகாணத்திற்கு செல்ல ஐ.நா பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

புத்த பிக்குகளால் ஆதரிக்கப்பட்ட மியான்மர் ராணுவம் நடத்திய அடித்து துன்புறுத்தல், கொலை செய்தல் மற்றும் கிராமங்களை கொளுத்துதல் போன்ற தாக்குதலினால் ரோஹிஞ்சாக்கள் எல்லைத் தாண்டி தப்பிச் செல்ல நேரிட்டது.

பத்திரிகையாளர்களிடமிருந்து கிடைத்த படங்கள் மற்றும் தகவல்களானது பல கிராமங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்துகின்றன.

ஆனால், ராணுவமோ தாங்கள் போராளிகளை மட்டுமே தாக்குவதாக கூறுகிறது.

இந்த வாரத்தின் தொடக்கத்தில் ரோஹிஞ்சா போராளிகளால் கொல்லப்பட்ட 45 ஹிந்துக்களின் சடலங்கள் பிணக் குவியலாக கண்டறியப்பட்டதாக ராணுவம் கூறியுள்ளது.

ராகைனில் கடும் கட்டுப்பாடுகள் உள்ளதால் அங்கு உள்ள களநிலவரத்தை அறிவது கடினமாக உள்ளது.

ஆனால் மனித உரிமை பாதுகாப்பு குழுக்கள் வங்கதேசத்திற்கு தப்பிச் சென்றவர்கள் தவிர, பல மக்கள் ராகைனுக்குள்ளேயே இடம்பெயர்ந்துள்ளதாகவும், அவர்களில் நூற்றுக்கணக்கானவர்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவ வசதிகள் கிடைக்கவில்லை என்றும் கூறுகின்றனர்.

ரோஹிஞ்சா நெருக்கடி

பெரும்பாலும் முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிஞ்சாக்களுக்கு மியான்மரில் குடியுரிமை மறுக்கப்பட்டு, அவர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றனர்.

புத்தர்களே அதிகமாக உள்ள ராகைன் மாகாணத்தில், இதற்கு முன்னர் பலமுறை வன்முறைகள் வெடித்துள்ளன.

ஐ.நா.வின் பல்வேறு அமைப்புகளின் மூத்த அதிகாரிகள் பங்கேற்க இருந்த இந்தப் பயணமானது அந்த பகுதிகளுக்கு முதல் முறையாக செல்லவிருக்கும் சுதந்திரமான மற்றும் பரந்த வாய்ப்பாக அமையுமென்று நம்புவதாக இந்த பயணம் ரத்து செய்யப்படுவதற்கு முன்னர் கடந்த புதன் கிழமையன்று பேசிய ஐநாவின் செய்தித்தொடர்பாளர் ஸ்டிபன் டுஜாரிக் கூறியிருந்தார்.

இந்த சூழ்நிலை குறித்து விவாதிப்பதற்காக ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நியூயார்க்கில் வியாழக்கிழமை பிற்பகுதியில் கூடவுள்ளது.

இந்த நெருக்கடி நிலையை சமாளிக்கும் விதத்தினால் மியான்மரின் பிரதமர் ஆங் சான் சூச்சி பன்னாட்டளவில் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார்.

இந்நிலையில் ஆங் சான் சூச்சியை வியாழக்கிழமை அன்று சந்தித்த இங்கிலாந்தின் வெளியுறவுத் துறை அலுவலக அமைச்சர் மார்க் பீல்ட் ராகைனில் நிலவும் வன்முறையை முடிவுக்கு கொண்டு வருமாறு வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *