கருக்கலைப்பு சட்டம் பெண்களுக்கு வரமா? சாபமா?

“ஒன்பது மாதங்கள் கஷ்டப்பட்டு குழந்தையை பிரசவித்தேன். அது கருவில் இருக்கும்போதே உயிர் பிழைக்க வைப்பது கஷ்டம் என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டார்கள். பிரசவித்தபின் குழந்தைக்கு பொருத்தியிருந்த கருவியை அகற்றப் போவதாகவும் கூறினார்கள். குழந்தையை என் கையில் ஏந்தக்கூட அவர்கள் தரவில்லை. தாய்பாலும் ஒரு குழாய் வழியாகத்தான் ஊட்டப்பட்டது. கடைசியில் அக்குழந்தை இறந்து விட்டது” என்று மனவேதனையை தெரிவிக்கிறார் குழந்தையைப் பிரசவித்த தாயொருவர்.

வயிற்றில் கருவாக இருந்தவேளை 3ம் மாதத்திலேயே அது இறந்துவிடும் என்பதை உறுதி செய்திருந்தாலும் கருக்கலைப்பு சட்டத்தின் கீழ் கர்ப்பத்தை முடிவுக்கு கொண்டு வர அனுமதி கிடையாது என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டதாக தனது பெயரை குறிப்பிட விரும்பாத பெண் ஒருவர் கூறியுள்ளார்.

ஒரு வாரம் கூட உயிர் வாழப் போவதில்லை என்று கூறப்படும் குழந்தையை வைத்துக் கொண்டு படும் கஷ்டங்கள் அந்த தாய்க்கு மட்டுமேதான் புரியும், வேறு யாருக்கும் புரியப்போவதில்லை என்பதை அவர் வழங்கிய தகவல்கள் மூலம் அறியமுடிகின்றது.

கோப்புப்படம்

வைத்திய விஞ்ஞானத்தின்படி கருவில் தீவிரக் குறைபாடு (serious foetal impairments) இருந்தால் 15 முதல் 20 வாரங்களில் இனம் காண முடியும். சிறப்பு மருத்துவர்களின் கூற்றுப்படி, அநேகமான குழந்தைகள் உயிருடன் பிறப்பது இல்லை. அதனை அறிந்தும் கர்ப்ப காலத்தைத் தொடர வேண்டிய நிலை அந்தப் பெண்களுக்கு ஏற்படுவதாக மருத்துவத் துறையினரால் சுட்டிக் காட்டப்படுகிறது.

இந்தியாவில் பாலியல் வன்முறை காரணமாக கருவுற்ற 10 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய நீதிமன்றம் அனுமதி மறுத்த சம்பவத்தை சுட்டிக் காட்டுகின்ற இலங்கையிலுள்ள மருத்துவ துறையினர் இவ்வாறு வயது குறைந்த பெண் பிள்ளைகள் கருவுற்றல் இலங்கையிலும் பதிவாகியுள்ளதாகக் கூறுகின்றனர்.

“அவ்வாறு கருவில் தீவிர குறைபாடுடைய குழந்தையை சுமக்கிற தாய்க்கு குழந்தை பிரசவமாகி உயிர் வாழும் காலம் வரை சுகாதார சேவைகள் கிடைக்க வேண்டும்,” என்று கூறுகிறார் சுகாதார அமைச்சகத்தின் குடும்ப சுகாதார பணியக சமூக மருத்துவ நிபுணரான டாக்டர் கபில ஜயரட்ன.

“பிறவிக் குறைபாடுடைய பிள்ளைகளின் பெற்றோர் சமூக ரீதியாக பொருளாதார ரீதியாக பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கிறார்கள். அது போன்று பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான இள வயது பெண் பிள்ளைகளும் உள ரீதியாக மன ரீதியாக அழுத்தங்கள் தொடர்பாக புதிதாகக் கூற எதுவும் இல்லை.” என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

இலங்கையில் குற்றவியல் சட்டத்தின் கீழ் கருவினால் தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என கருதப்பட்டால் அந்த சந்தர்ப்பத்தில் மாத்திரம் தான் கருக்கலைப்புக்கு அனுமதி கிடைக்கின்றது.

தற்போது மருத்துவ நிபுணர்கள் குழுவொன்றினால் பாலியல் துஷ்பிரயோகம், இள வயது கர்ப்பம் (பாலியல் துஷ்பிரயோகம்), கருவில் தீவிர குறைபாடு போன்ற காரணங்களின் நிமித்தம் கருக்கலைப்புக்கு அனுமதியளிப்பது தொடர்பான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டு ஏற்கனவே கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

பௌத்த, கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்களிடமிருந்து அதற்கு கிளம்பியுள்ள எதிர்ப்புகள் காரணமாக அந்தப் பரிந்துரைகள் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளன.

“கருக்கலைப்பு தொடர்பாக சமூகத்தில் மத ரீதியாக பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும் குறித்த தரப்பு பெண்கள் முகம் கொடுக்கின்ற துன்பகரமான தலை விதியை கருதி அவர்களுடைய கர்ப்பததை முடிவுக்கு கொண்டு வர அவர்களுக்கு இடமளிக்கப்பட வேண்டும். ” என்கின்றார் வைத்திய நிபுணர் டாக்டர் கபில ஜயரட்ன.

கோப்புப்படம்

“இவ்வாறான தலைவிதிக்கு முகம் கொடுக்கும் பெண்களை மனிதாபிமானத்துடன் பார்க்க வேண்டும்,” என்ற கருத்தையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.

“கருக்கலைப்பு தொடர்பான சட்ட விதிகளில் குறித்த காரணங்களுக்காக தளர்வு ஏற்படுத்தப்பட்டாலும் அதனை துஷ்பிரயோகம் செய்வதைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை எடுக்க முடியும் ” என்றும் டாக்டர் கபில ஜயரட்ன குறிப்பிடுகின்றார்.

இலங்கையில் வருடாந்தம் சராசரி 6,000 பிறப்பு குறைபாடுடைய பிரசவங்கள் இடம் பெறுவதாக சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார வாரியத் தகவல்களின்படி அறியமுடிகிறது.

இவற்றில் 68 சதவீதமான குழந்தைகள் ஒரு வாரத்திற்குள் இறக்கின்றன. 500 – 600 வரையிலான குழந்தைகள் ஒரு வருடத்திற்குள் இறக்கின்றன. 1,700 குழந்தைகள் தாயின் கருவிலே உயிரிழக்கின்றன என்றும் அந்த தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *