அனுமதியின்றி பாம்புகளை வைத்திருந்த வைத்தியர்: 60000 ரூபா அபராதம்

எட்டு பாம்புகளை சிறை பிடித்து வைத்திருந்த வைத்தியர் ஒருவருக்கு இலங்கை நீதிமன்றமொன்று 60000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

வன விலங்குகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலொன்றின்படி மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது தென் மாகாணத்தில் அமைந்துள்ள மாத்தறை , மிரிஜ்ஜவில பகுதியில் வசித்து வந்த அந்த வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ள வன விலங்குகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகள், சந்தேக நபரான வைத்தியர் தனது வீட்டில் எட்டு பாம்புகளை சிறை பிடித்து வைத்து அவற்றை வெளி நாட்டவர்களுக்கு காண்பித்து பணம் சம்பாதித்து வந்ததாக தெரிவித்துள்ளனர்.

வன விலங்குகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அனுமதியின்றி இவ்வாறு பாம்புகளை தன் வசம் வைத்திருந்தது சட்ட விரோதமான செயலென்று கூறியுள்ள அந்த அதிகாரிகள், மிருகங்களை பொது மக்களுக்கு காண்பித்து பணம் பெறுவதற்கு தனது திணைக்களத்தின் விசேட அனுமதி அவசியமென்று அறிவித்தனர்.

ஆனால், சந்தேக நபர் தகுந்த அனுமதியின்றி இந்த செய்களை மேற்கொண்டுள்ள காரணத்தினால் வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவருக்கு தகுந்த தண்டனைகளை பெற்றுக்கொடுக்குமாறு அந்த அதிகாரிகள் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தனர்.

அப்போது தான்குற்றத்தை ஒப்புக்கொள்வதாக சந்தேக நபரான வைத்தியர் நீதிமன்றத்தில் அறிவித்தார்.

இதன்படி சந்தேக நபருக்கு 60000 ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, சந்தேக நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பாம்புகளை வன விலங்குகள் பாதுகாப்பு திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *